தமிழ்நாடு பேட்டரி எரிசக்தி சேமிப்பு கொள்கை 2026: சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்

தமிழ்நாட்டில் 1 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட புதிய சூரிய ஆற்றல் திட்டங்களுக்கு பேட்டரி சேமிப்பு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கவும், மின்கட்டமைப்பை வலுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு புதிய பேட்டரி எரிசக்தி சேமிப்பு கொள்கை 2026-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மின்சார வாரிய தலைமையகத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், 2029-ம் ஆண்டிற்குள் 10 கிகாவாட் (GWh) பேட்டரி சேமிப்பு திறனை உருவாக்குவதாகும். இதன் மூலம் பகல் நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான சூரிய மின்சக்தியை வீணாக்காமல் சேமித்து, மின் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, 1 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட அனைத்து புதிய சூரிய மின்சக்தி திட்டங்களும், தங்கள் நிறுவப்பட்ட திறனில் குறைந்தபட்சம் 10 சதவீத அளவிற்கு பேட்டரி சேமிப்பு வசதியை கொண்டிருக்க வேண்டும். இந்த பேட்டரி அமைப்புகள் நான்கு மணி நேரம் மின்சாரத்தை வழங்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். கொள்கை அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து விண்ணப்பிக்கும் திட்டங்களுக்கும் மற்றும் ஏப்ரல் 1, 2027 முதல் செயல்பாட்டுக்கு வரும் புதிய திட்டங்களுக்கும் இந்த நிபந்தனை கட்டாயமாகும். மேலும், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை ஒருங்கிணைக்கும் புதிய துணை மின் நிலையங்களும் 10 சதவீதமும், ஏற்கனவே உள்ள துணை மின் நிலையங்கள் படிப்படியாக 10 சதவீத சேமிப்பு திறனையும் கொண்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பகல் நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 3,000 முதல் 4,000 மெகாவாட் சூரிய மின்சாரம் சரியாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனம் (TNGECL) இந்த கொள்கையை செயல்படுத்தும் முதன்மை அமைப்பாக செயல்படும். இதன் முதல் கட்டமாக 2,500 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய பேட்டரி வசதிகள் போட்டி ஏலங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சூரிய மற்றும் காற்று மின்சக்தி திட்டங்களும் கூடுதல் அனுமதி இன்றி பேட்டரி சேமிப்பு வசதிகளை இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டங்களை ஊக்குவிக்க 10 ஆண்டுகளுக்கு மின்சார பரிமாற்றக் கட்டண விலக்கு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
மின்சாரத் திட்டங்களுக்கான ஒப்புதல் செயல்முறையை எளிதாக்கும் வகையில், அமைச்சர் 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்பப் போர்ட்டலை' (Renewable Energy Application Portal) தொடங்கி வைத்தார். இது சூரிய சக்தி, காற்று மின்சக்தி மற்றும் பேட்டரி சேமிப்பு திட்டங்களுக்கான ஒரே சாளர இணையதளமாகும். முன்னதாக மின்சார வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும் முறை இருந்த நிலையில், தற்போது பதிவு செய்தல், ஆவணங்கள் சமர்ப்பித்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனை போன்ற அனைத்து பணிகளையும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ளலாம். இது தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.









