தமிழ்நாட்டில் கட்டுமான விதிகளில் அதிரடி மாற்றம்: கட்டிடங்களின் உயர வரம்பு மற்றும் வாகன நிறுத்துமிடம் குறித்த புதிய விதிமுறைகள்

தமிழ்நாட்டில் அடுக்குமாடி அல்லாத கட்டிடங்களுக்கான உயர வரம்பு 19.5 மீட்டராக உயர்வு மற்றும் புதிய கட்டுமான விதிமுறைகள் அமல்.
தமிழ்நாட்டின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 2019-ஆம் ஆண்டின் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லாத (Non-high-rise buildings) கட்டிடங்களின் அதிகபட்ச உயர வரம்பு தற்போது 18.3 மீட்டரிலிருந்து 19.5 மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கட்டுமானத் துறையில் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. இந்த அரசாணையின் மூலம் வணிக பயன்பாடு, வாகன நிறுத்துமிடம், குடியிருப்பு வசதிகள், மின்சார வாகனங்களுக்கான மின்னூட்டல் வசதி (EV charging) மற்றும் அணுகல்தன்மை குறித்த புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
புதிய திருத்தங்களின்படி, தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் உயிர் தகவலியல் மையங்களுக்குத் தனித்தனியான வாகன நிறுத்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்கள், ஒவ்வொரு 75 சதுர மீட்டர் பரப்பளவிற்கும் ஒரு கார் நிறுத்துமிடமும், ஒவ்வொரு 50 சதுர மீட்டர் பரப்பளவிற்கும் ஒரு இருசக்கர வாகன நிறுத்துமிடமும் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் வாகன ஓட்டுநர்களின் வசதிக்காக, அங்கு ஒதுக்கப்படும் கார் நிறுத்துமிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தங்கும் விடுதி வசதி (Dormitory) செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதும் புதிய விதிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் வசிக்கும் பகுதிகள் மற்றும் நத்தம் நிலங்களில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு, குறைந்தபட்ச மனை அளவு 80 சதுர மீட்டராகவும், அதன் தளப்பரப்பு குறியீடு (FSI) ஒன்றாக வரையறுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் குறைந்தபட்ச மனை அளவு 220 சதுர மீட்டராகவும், FSI வரம்பு 0.8 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அடுக்குமாடி கட்டிடங்களைப் பொறுத்தவரை, 12 மீட்டர் அகலமுள்ள சாலைகளுக்கு 2, 15 மீட்டர் அகலமுள்ள சாலைகளுக்கு 2.5 மற்றும் 18 மீட்டர் அகலமுள்ள சாலைகளுக்கு 3.25 என்ற அடிப்படையில் FSI அனுமதிக்கப்படுகிறது. கட்டிடத்தின் உயரத்தைப் பொறுத்து, அதன் முகப்பு இடைவெளி (Setbacks) ஏழு மீட்டர் முதல் 16 மீட்டர் வரை மாறுபடும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து புதிய குடியிருப்பு கட்டிடங்களிலும் கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்களில் மின்னூட்டல் வசதிக்கான மின் வயரிங் வசதிகள் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 14 மீட்டர் உயரத்திற்கு உட்பட்ட கட்டிடங்கள், எட்டு குடியிருப்புகளுக்கு மிகாத கட்டிடங்கள் மற்றும் 750 சதுர மீட்டர் வரை பரப்பளவு கொண்ட கட்டிடங்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட திட்டங்களில், பார்வையாளர்களுக்கான வாகன நிறுத்தங்களில் பாதியளவு மின்சார வாகனங்களுக்கான அதிவேக மின்னூட்டல் வசதியுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









