தெற்காசியாவின் எரிசக்தி மையமாக உருவெடுக்குமா தமிழ்நாடு? ஐஐடி மெட்ராஸ் கருத்தரங்கில் முக்கிய ஆலோசனை

தமிழ்நாட்டை தெற்காசியாவின் பசுமை ஆற்றல் மையமாக மாற்ற முடியும் என்று மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை தெற்காசியாவின் முதன்மையான பசுமை ஆற்றல் மையமாக மாற்றும் அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற ஐந்தாவது எரிசக்தி உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், மாநிலத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் நிலவும் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, கடலடி கேபிள்கள் மூலம் அண்டை நாடுகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் திறன் தமிழகத்திற்கு உள்ளதாகக் குறிப்பிட்டார். காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தியில் தமிழ்நாடு ஏற்கனவே மற்ற மாநிலங்களை விட முன்னோடியாகத் திகழ்வதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எரிசக்தி உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்கினாலும், அந்த ஆற்றலைச் சேமித்து வைப்பதில் உள்ள சவால்களைக் களைவது மிக அவசியம் என்று பிரவீன் சக்ரவர்த்தி வலியுறுத்தினார். தற்போதைய நிலையில் இந்தியா லித்தியம்-அயன் பேட்டரிகளை இறக்குமதி செய்ய குறிப்பாக சீனாவை பெருமளவில் சார்ந்துள்ள சூழலை அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சார்பு நிலையை மாற்றி, உள்நாட்டிலேயே பேட்டரி மற்றும் எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் ஆழமாக எடுத்துரைத்தார். இது இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்திற்கு அடித்தளமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி பேசுகையில், எரிசக்தி உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கினார். செயற்கை நுண்ணறிவு, விவசாயம் மற்றும் நவீன உற்பத்தித் துறைகளில் எரிசக்தி தொழில்நுட்பங்களின் பங்கு இன்றியமையாதது என்று அவர் கூறினார். ஐஐடி மெட்ராஸின் 'எனர்ஜி கன்சோர்டியம்' அமைப்பின் ஏற்பாட்டில் நவம்பர் 17 முதல் 21 வரை நடைபெற்று வரும் இந்த உச்சி மாநாட்டில், தொழில் துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை முடிவெடுப்பவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் மேம்பட்ட பேட்டரி தொழில்நுட்பங்கள், ஹைட்ரஜன் அமைப்புகள், எரிசக்தித் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மற்றும் நிலையான எரிசக்தி கட்டமைப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. மாநாட்டின் இறுதி நாட்களான நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) மத்தியில் அணுசக்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்திச் சூழலை உருவாக்குவது குறித்தும், அணுசக்தித் துறை சார்ந்த கூறுகளுக்கான சான்றிதழ் திட்டங்கள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன.









