தமிழ் வழி இட ஒதுக்கீடு சட்டத் திருத்தம்: புதிய விதிகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளைத் தடுக்கவும், கடந்த கால நியமனங்களைச் சட்டபூர்வமாக்கவும் புதிய சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகளில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் 20 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டு முறை தொடர்பான சட்டத்தில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டத் திருத்தத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, இது தொடர்பான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இட ஒதுக்கீடு தொடர்பான சட்டச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சமாக, தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டை ஒருவர் ஒருமுறை மட்டுமே அரசுப் பணிக்காகப் பயன்படுத்த முடியும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெற்றவர்கள், மீண்டும் அதே பிரிவின் கீழ் மற்றொரு அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை கோர முடியாது. இருப்பினும், விண்ணப்பிக்கும் புதிய பணியானது தற்போது வகிக்கும் பதவியை விட உயர் ஊதியம் கொண்டதாக இருந்தால், இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய விதியானது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணி இடங்களுக்குப் பொருந்தாது.
கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி முதல், 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அரசு பணி நியமனங்களையும் இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் அல்லது பிற அதிகார அமைப்புகளின் வழிகாட்டுதல்கள் ஏதேனும் இருந்தபோதிலும், இந்த காலகட்டத்தில் நடைபெற்ற பணி நியமனங்கள் அனைத்தும் சட்டபூர்வமானவை என்று இந்த திருத்தம் தெளிவுபடுத்தியுள்ளது. இது ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான முன்னுரிமை இட ஒதுக்கீடு என்பது, 2010-ம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. காலப்போக்கில், கல்வித் தகுதிக்கேற்ற வகையில் தமிழ் வழிக் கல்வியை வரையறுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன்படி, அரசுப் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் மொழியிலேயே பயின்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த விரிவான சட்டத் திருத்தமானது, அரசுத் துறைகளில் நேரடி நியமனங்களை ஒழுங்குபடுத்துவதையும், இட ஒதுக்கீடு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.









