தமிழ்நாடு அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: முதல்வர் சி.ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 2025-26-ஆம் நிதியாண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையை வழங்க முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்கள் ஆற்றி வரும் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்கள் பயன்பெற உள்ளனர்.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு சுமார் 367.2 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நிறுவனங்களில் உள்ள ஒதுக்கீடு செய்யக்கூடிய உபரி வருவாயைப் பொறுத்து இந்த தொகையானது கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இதன்படி, போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் 8,400 ரூபாயும், அதிகபட்சம் 16,800 ரூபாயும் போனஸ் தொகையாக கிடைக்கும்.
குறிப்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மாநில போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஆவின் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியான தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 20 சதவீதம் வழங்கப்பட உள்ளது. அதேசமயம், போதிய உபரி வருவாய் இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீத குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









