தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க புதிய ஆணையம்: 20 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

தமிழ்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் 20 பேர் கொண்ட புதிய ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) தொடர்பான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஏதுவாக 20 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை (TNIPC) தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம், தொழில் முதலீடுகள் தொடர்பான திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பைத் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வணிக வசதிச் சட்டத்தின் (Tamil Nadu Business Facilitation Act, 2018) கீழ் இந்த புதிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் 16-ஏ பிரிவின் கீழ், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆணையம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அரசாணையைத் தமிழக அரசு முறைப்படி பிறப்பித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவதே இந்த ஆணையத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த ஆணையத்திற்குத் தலைமைச் செயலாளரைத் தலைவராகக் கொண்டு செயல்படும். தொழில் துறைச் செயலாளர் இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலராக இருப்பார். நிதித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME), வணிக வரி மற்றும் பதிவுத் துறை, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, நீர்வளத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட 18 முக்கியத் துறைகளின் செயலாளர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இது தவிர நில நிர்வாகம் மற்றும் நிலச் சீர்திருத்த ஆணையர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆகியோரும் இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆணையத்தின் முக்கியப் பணியானது, முதலீட்டாளர்கள் கொண்டு வரும் முதலீட்டு வாக்குறுதிகளை விரைவாகத் திட்டங்களாக மாற்றுவது மற்றும் அதனைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதாகும். ஏற்கனவே பல துறைகள் தனித்தனியாகச் செயல்பட்டு வந்த நிலையில், இந்த ஆணையம் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு மையப்புள்ளியாகச் செயல்படும். இதன் மூலம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் ஒரே இடத்தில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அரசு திட்டமிட்டுள்ளது.









