தமிழ்நாடு அரசு அதிரடி: மனித-வனவிலங்கு மோதல்களுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு - புதிய விவரங்கள் இதோ

தமிழ்நாட்டில் மனித-வனவிலங்கு மோதல்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மனித-வனவிலங்கு மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு கணிசமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககர்லா உஷா இது தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்த புதிய திருத்தங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் நிதி உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வனத்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, வனவிலங்குகளால் ஏற்படும் தாக்குதலில் படுகாயம் அடைபவர்கள் அல்லது 20 முதல் 60 சதவீதம் வரை ஊனம் அடைபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 59,100 என்ற இழப்பீடு, இனி ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவ அதிகாரி அல்லது அரசு அமைத்த மருத்துவக் குழுவின் சான்றிதழ் அடிப்படையில் இந்தத் தொகை வழங்கப்படும். அதேபோல், சிறிய அளவிலான காயங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படாத நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ. 20,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வனப் பகுதிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் மோதல்களுக்கும் இந்த நிதியுதவி பொருந்தும், இருப்பினும் வனச் சட்டங்களை மீறாதவர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும்.
பயிர் சேதங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 ஆக இருந்த இழப்பீடு, தற்போது ரூ. 40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தென்னை மரங்களைப் பொறுத்தவரை, அதன் வயது மற்றும் விளைச்சலைப் பொறுத்து மரம் ஒன்றுக்கு ரூ. 500 முதல் ரூ. 2,000 வரை இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வாழைப் பயிர்களுக்குச் செடி ஒன்றுக்கு ரூ. 250 இழப்பீடும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகள் சேதமடைந்தால், பக்கா வீடுகளுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலும், குடிசை வீடுகளுக்கு ரூ. 15,000 வரையிலும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 10,000 வரையிலும் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போருக்கும் இந்த உயர்வு பயனுள்ளதாக இருக்கும் வகையில், கறவை மாடுகள் உயிரிழந்தால் வழங்கப்பட்டு வந்த ரூ. 30,000 என்ற இழப்பீடு தற்போது ரூ. 40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளரின் பரிந்துரையின் பேரில், நிதித்துறையின் ஒப்புதலுடன் இந்த திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.









