தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை: அரசு பெருமிதம்

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்த 312 கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், மாநில உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த செப்டம்பர் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலக்கட்டத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்த 312 கொடையாளர்களின் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் டாரஸ் அகமது பங்கேற்று, கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் பொன்னாடை அணிவித்து தனது மரியாதையை செலுத்தினார். இந்த நிகழ்வில் காணொளி காட்சி வாயிலாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, குறிப்பிட்ட ஓராண்டு காலத்தில் மட்டும் 1,699 உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதில் 78 இதயங்கள், 106 நுரையீரல்கள், 254 கல்லீரல்கள், 523 சிறுநீரகங்கள், 2 கணையங்கள் மற்றும் 12 சிறுகுடல்கள் அடங்கும். இவை தவிர, 9 கைகள், 40 இதய வால்வுகள், 483 கருவிழிகள், 104 தோல் மற்றும் 96 எலும்பு தானங்களும் பெறப்பட்டு மருத்துவ சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் பதக்கங்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
உறுப்பு தானம் செய்யப்பட்ட தருணங்களில், போக்குவரத்து நெரிசலின்றி உறுப்புகளை விரைவாகக் கொண்டு செல்ல பசுமை வழித்தடங்களை (Green Corridors) அமைத்துக் கொடுத்த சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கும் இந்த விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) ஆண்டு அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டார். உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் சிறந்து விளங்குவதையும், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்தைப் பெற்று, மத்திய அரசின் சிறந்த மாநில விருதைப் பெற்றதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
உலக அளவில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. விபத்தில் உயிரிழந்த 15 வயது சிறுவன் ஹிதேந்திரனின் நினைவு நாளான செப்டம்பர் 23 ஆம் தேதியை, மாநில உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினமாக அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில், உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வெளியிட்ட செய்தியில், மனிதநேயத்தின் உன்னதமான செயலாக உறுப்பு தானத்தைக் குறிப்பிட்டார். உறுப்பு தானம் செய்பவர்கள் மறுவாழ்வு அளிப்பவர்களாகவும், மனிதநேயத்தின் சுடராகவும் திகழ்கிறார்கள் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.









