dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழக அரசுப் பள்ளிகளில் திறனறியும் தேர்வு: 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வித் திறன் மதிப்பீடு

By Admin
15/10/2026
39 views
தமிழக அரசுப் பள்ளிகளில் திறனறியும் தேர்வு: 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வித் திறன் மதிப்பீடு

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியைக் கண்டறிய அக்டோபர் 21 முதல் திறனறியும் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும், பாடங்களில் அவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவெளியைக் கண்டறிந்து சரி செய்யவும் 'திறன் பிளஸ்' (THIRAN PLUS) எனும் புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை அடிப்படைத் திறனறியும் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. கடந்த கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், தற்போது இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வு முறையான அட்டவணைப்படி நடத்தப்பட உள்ளது. அதன்படி, அக்டோபர் 21 அன்று தமிழ் பாடத்திற்கும், அக்டோபர் 22 அன்று ஆங்கில பாடத்திற்கும், அக்டோபர் 23 அன்று கணித பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெறும். இந்தத் தேர்வில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில், ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் குறைந்தது 40 சதவீத மாணவர்கள் இந்தத் தேர்வில் கலந்துகொள்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

சுமார் 10.5 லட்சம் மாணவர்களைக் குறிவைத்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக 12.05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜமோகன் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்தத் தேர்வு மாணவர்களின் அடிப்படைத் திறன்களைச் சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை அடையாளம் காணுதல், எளிய வாக்கியங்களை வாசித்தல் மற்றும் எழுதுதல், எண்களைக் கையாளுதல், பெருக்கல் வாய்ப்பாடுகளை ஒப்புவித்தல் மற்றும் இரண்டு இலக்கக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணிதச் செயல்பாடுகளில் மாணவர்களின் புரிதலை இந்தத் தேர்வு அளவிடும்.

இந்தத் தேர்வில் கேட்கப்படும் 10 கேள்விகளுக்கு மாணவர்கள் 40 நிமிடங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். ஆசிரியர்கள் எவ்வித உதவியும் இன்றி மாணவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட ஊக்குவிக்க வேண்டும் என்றும், விடைத்தாள்களை முறையாக மதிப்பீடு செய்து மதிப்பெண் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதிப்பெண்களை அக்டோபர் 24 முதல் அக்டோபர் 31-க்குள் கல்வித்துறையின் இஎம்ஐஎஸ் (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், கூடுதல் பயிற்சி தேவைப்படும் மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் திறனறியும் திட்டத்தின் கீழ் இலக்கு சார்ந்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகம்
#பள்ளிக்கல்வித்துறை
#மாணவர்கள்
#கல்வி
#திறன்மதிப்பீடு
#TamilNadu
#SchoolEducation
#StudentAssessment
#EducationUpdate
#ThiranPlus
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications