dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி: தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு புகார்

By Admin
22/10/2026
53 views
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி: தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு புகார்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று, மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சவிதா மருத்துவக் கல்லூரி, தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சவிதா மருத்துவக் கல்லூரி ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் வருவதால், அது மாநில கட்டண நிர்ணயக் குழுவின் வரம்பிற்குள் வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் எம்பிபிஎஸ் மாணவர்களிடம் ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணமாக 24.75 லட்சம் ரூபாய் கோருவதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தாத மாணவர்களின் வருகைப் பதிவேடு இணையதளத்தை (VStudy) கல்லூரி நிர்வாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் முடக்கியுள்ளது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்று அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, முடக்கப்பட்ட வருகைப் பதிவேடு இணையதளத்தை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்தை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கட்டணம் செலுத்தாத காரணத்தினால் எந்தவொரு மாணவருக்கும் வருகைப் பதிவை மறுக்கவோ, இன்டர்ன்ஷிப் பயிற்சியைத் தடுக்கவோ அல்லது தேர்வு எழுதத் தடை விதிக்கவோ கூடாது என்றும் அரசு தனது கடிதத்தில் தெளிவாகக் கேட்டுக்கொண்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையைத் திரும்ப வழங்கவோ அல்லது சரிசெய்யவோ உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த புகாரில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எதிராகக் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதிலும், கல்வி நிறுவனங்கள் முறையான கட்டண விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் தன்னிச்சையான இத்தகைய செயல்பாடுகள் குறித்து தேசிய மருத்துவ ஆணையம் விரைவான விசாரணையை முன்னெடுத்து, தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மாணவர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழ்நாடு
#மருத்துவக்கல்வி
#சவிதாமருத்துவக்கல்லூரி
#கல்விக்கட்டணம்
#தேசியமருத்துவஆணையம்
#TamilNaduNews
#SaveethaMedicalCollege
#MedicalEducation
#NMC
#MedicalFeesIssue
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications