தமிழ்நாடு விடுதி மாணவர்கள் உணவுப்படி உயர்வு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிரடி அறிவிப்புகள்

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி மாணவர்களின் உணவுப்படி உயர்த்தப்படுவதாக அமைச்சர் வன்னி அரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில், உணவுப்படி மற்றும் பராமரிப்பு மானியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் தனது துறையின் மீதான மானியக் கோரிக்கையின் போது சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இதனைத் தெரிவித்தார். இதற்காக கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த புதிய அறிவிப்பின்படி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான மாதாந்திர உணவுப்படி ரூ. 1,400-ல் இருந்து ரூ. 1,800 ஆகவும், பள்ளி விடுதி மாணவர்களுக்கு ரூ. 1,500-ல் இருந்து ரூ. 2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
விடுதிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில், பராமரிப்பு மானியமும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளி விடுதிகளுக்கான பராமரிப்பு மானியம் ரூ. 50,000-ல் இருந்து ரூ. 75,000 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ. 75,000-ல் இருந்து ரூ. 1 லட்சம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விடுதிகளை முறையாகப் பராமரிக்க 'அறன்' என்ற பெயரில் புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும். மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளி பராமரிப்பு மானியங்கள் உயர்த்தப்படுவதுடன், 23 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். புதிய சமூக நீதி விடுதிகளைக் கட்ட ரூ. 160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 150 விடுதிகள் கட்டப்படவுள்ளன.
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக நந்தனத்தில் பழங்குடியினர் ஆய்வு மையம் அமைக்கப்படும். அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ரூ. 30 கோடி செலவில் 100 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், பழங்குடியினப் பகுதிகளில் 250 சிறப்புக் குழந்தைகள் காப்பகங்கள் (அங்கன்வாடிகள்) நிறுவப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. துப்புரவுத் தொழிலாளர்களின் நலன் கருதி, 'அகம்' திட்டத்தின் கீழ் 2,500 வீடுகள் கட்டப்பட உள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக ரூ. 50 கோடி மதிப்பீட்டில் 'ஏற்றம்' என்ற புதிய தொழில்முனைவோர் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்கிடையில், ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையிலான சிறப்புச் சட்டத்தை உருவாக்குவது குறித்த பணிகளும் தீவிரமடைந்துள்ளன. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து வருகிறது. இந்தக் குழுவின் பதவிக்காலம் மேலும் ஒன்பது மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இதற்கான சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு உறுதி அளித்துள்ளார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுதல், தொழில் மேம்பாட்டிற்கான 'தடம்' எனும் கலாச்சார நிகழ்வு மற்றும் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன.









