தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வு: புதிய திட்டம் மற்றும் கட்டுமான அனுமதி விதிகளில் முக்கிய மாற்றங்கள்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலங்கள் தொடர்பான நீண்டகால வழக்குகளைத் தீர்க்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள வீட்டு வசதி வாரிய நிலப் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி. ராஜ்குமார் சட்டப்பேரவையில் இது குறித்த விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டும், இழப்பீடு வழங்கப்பட்டும், முழுமையாக வாரியத்திடம் ஒப்படைக்கப்படாத நிலங்கள், ஆக்கிரமிப்புகள் அல்லது சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்கியுள்ள நிலங்களை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்துவது அல்லது விடுவிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான அனுமதி பெறுவதை எளிதாக்கும் வகையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, குடியிருப்பு கட்டிடங்களுக்கான சுய சான்றிதழ் (Self-certification) வரம்பு தற்போதுள்ள 3,500 சதுர அடியிலிருந்து 5,000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகள் அல்லது ஸ்டில்ட் மற்றும் மூன்று மாடிகள் கொண்ட கட்டிடங்களுக்குப் பொருந்தும். சிறிய வணிக வளாகங்களுக்கு 1,500 சதுர அடி வரை இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெரிய கட்டிடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு முறை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும்.
விவசாய நிலங்களை மாற்றுவதில் இருந்த நடைமுறைச் சிக்கல்களைக் குறைக்கவும் புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. திட்டமிடப்படாத பகுதிகளில் உள்ள விவசாய நன்செய் நிலங்களை மாற்றுவதற்கு, தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் தடையில்லாச் சான்றிதழ் பெறும் முறைக்கு மாற்றாக, நகர மற்றும் ஊரமைப்புத் துறை, வேளாண்மைத் துறை, நீர்வளத் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய காலமுறை அனுமதி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நில பயன்பாட்டு மாற்றத்திற்காக முழுமையான ஆன்லைன் தளம் உருவாக்கப்படும், இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் கோப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த அறிவிப்புகளோடு சேர்த்து மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னைப் பெருநகரப் பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் கட்டமைப்புத் திட்டம், கோயம்பேடு மற்றும் சாத்தங்காடு சந்தைகளில் 20 கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கோயம்பேடு சந்தை விரிவாக்கத்திற்கு 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிதிலமடைந்த 12,648 அடுக்குமாடி குடியிருப்புகளை 2,882 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கவும், பெரம்பூரில் வீடற்ற ஏழை குடும்பங்களுக்காக 111 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 462 வீடுகளைக் கட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது.









