தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்: புதிய திட்டங்களுக்கு மக்களிடம் கருத்துக்கேட்பு - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது புதிய திட்டங்களுக்கான மக்கள் தேவையை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரத்யேகப் பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மாநிலம் முழுவதும் புதிய வீட்டுவசதித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் தேவை மற்றும் விருப்பங்களைக் கண்டறியும் வகையில் பிரத்யேகத் தேவை மதிப்பீட்டு இணையதளப் பக்கத்தை வாரியம் தனது அதிகாரப்பூர்வத் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட புதிய வீட்டுவசதித் திட்டங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான வீடுகளின் வகை, விரும்பும் இடம் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளைப் பதிவு செய்துகொள்ளலாம். tnhb.tn.gov.in/willingness-for-upcoming-projects என்ற இணைய முகவரிக்குச் சென்று, தாங்கள் வசிக்க விரும்பும் இடங்களைத் தேர்வு செய்து விருப்பத்தை வெளிப்படுத்தலாம். சென்னை மாநகரில் அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களிலும், பிற மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் குண்டூர்மலை, மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வல்லன்குமாரவிளை ஆகிய இடங்களில் இந்தத் திட்டங்கள் அமையவுள்ளன.
இந்த ஆன்லைன் பதிவு குறித்து வீட்டுவசதி வாரியம் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. இந்தத் தளத்தில் பதிவு செய்வது என்பது அந்த வீடுகளை ஒதுக்குவதற்கான முன்னுரிமையாகவோ அல்லது உறுதிமொழியாகவோ கருதப்படாது. மாறாக, குறிப்பிட்ட பகுதிகளில் வீடுகளுக்கான தேவை எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணிக்க மட்டுமே இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படும். இருப்பினும், பதிவு செய்யும் நபர்களுக்குத் திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட பிறகு, விண்ணப்பங்கள் கோரப்படும் விவரங்கள் மற்றும் காலக்கெடு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி வாயிலாக முன்னதாகவே தெரிவிக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் வீட்டு வசதித் திட்டங்களை முறையாகவும், பொதுமக்களின் தேவைக்கேற்பவும் திட்டமிடுவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும். சுயநிதித் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள இந்த வீடுகளைப் பெற ஆர்வமுள்ளவர்கள், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் தங்களின் விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நவீன டிஜிட்டல் முறைகள் மூலம் அரசுத் திட்டங்களை மக்கள் எளிதில் சென்றடையவும், தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.









