தமிழக அரசு நூலக புத்தக கொள்முதல் முறைகேடு: ஏஐ மூலம் புத்தகம் தயாரித்த பதிப்பாளர் கைது

தமிழக அரசு நூலகங்களுக்கு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்களை விநியோகம் செய்த புகாரில் பதிப்பாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களுக்குத் தரமற்ற புத்தகங்களை விநியோகம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக, அகல்விளக்கு பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளரான ஆர். மோகன் என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இணையதளங்களில் உள்ள தகவல்களைக் கொண்டும், செயற்கை நுண்ணறிவு (ChatGPT) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் புத்தகங்களை உருவாக்கி, போலியான எழுத்தாளர்களின் பெயர்களில் அவற்றை அரசு நூலகங்களுக்கு விநியோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2026-ல் மட்டும் சுமார் 1.74 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காகச் சுமார் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல், ISBN எண்கள் இன்றி மற்றும் பாட நிபுணர்களின் மதிப்பீடு இன்றி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, நூலகங்களுக்கான புத்தகங்களை தேர்வு செய்யும் குழுவின் பரிந்துரை இன்றி, ஒருங்கிணைப்புக் குழுவினர் தன்னிச்சையாகப் புத்தகங்களைச் சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பதிப்பாளர் மோகன் மட்டுமல்லாது, பொது நூலக இயக்குநரகத்தின் அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் ஆகிய இடங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சில தனியார் நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பி.என்.எஸ். (BNS) சட்டப்பிரிவுகள், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பதிப்புரிமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலாளரின் புகார் மற்றும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் தமிழகம் முழுவதும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள புதிய நூலகங்கள் மற்றும் பதிப்பக அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பிய சந்தேகங்களைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் புத்தகங்களில் தவறான மற்றும் பொருளற்ற தகவல்களைப் பதிவு செய்துள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முறையான சரிபார்ப்பு இன்றி அரசுப் பணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.









