தமிழ்நாட்டில் குடும்பச் சொத்துப் பத்திரப் பதிவு இனி காகிதமற்ற முறை: நவம்பர் 2 முதல் நடைமுறை

தமிழகத்தில் குடும்பச் சொத்துப் பரிமாற்றப் பத்திரப் பதிவுகளை காகிதமற்ற மின்னணு முறைக்கு மாற்றும் திட்டம் நவம்பர் 2 முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் சொத்துப் பதிவு முறையை எளிமைப்படுத்தும் நோக்கில், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான சொத்துப் பரிமாற்றங்கள் தொடர்பான நான்கு முக்கிய பத்திரப் பதிவுகளை காகிதமற்ற மின்னணு முறைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, இந்த புதிய நடைமுறை வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடியேற்றப் பத்திரம், விடுவிப்புப் பத்திரம், பாகப்பிரிவினைப் பத்திரம் மற்றும் குடியேற்றப் பத்திர ரத்து செய்தல் ஆகிய நான்கு வகையான ஆவணங்கள் முழுமையாக மின்னணு மயமாக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, சொத்துப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை ஆன்லைன் மூலமாகவே தயாரித்து சமர்ப்பிக்க முடியும். இந்த ஆவணங்கள் மின்னணு பணிப்பாய்வு முறை மூலம் சரிபார்க்கப்படும். பதிவு செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பயனாளிகளின் தனிப்பட்ட மின்னணு கணக்கிற்கு (Citizen Login) நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், இந்த ஆவணங்கள் அனைத்தும் அரசின் ஸ்டார் (STAR) மென்பொருள் கட்டமைப்பில் நிரந்தரமாகப் பாதுகாப்பாக சேமிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஸ்டார் 3.0 திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது.
இந்த மின்னணு பதிவு முறை செயல்பாட்டுக்கு வந்தாலும், சொத்துப் பரிமாற்றம் செய்பவர்கள் நேரில் ஆஜராவதிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதிவுப் பணிகளை முழுமையாக்க, சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் இரு தரப்பினரும் நேரில் சென்று தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக ஆதார் அங்கீகார நடைமுறைகளை நிறைவு செய்த பின்னரே பத்திரப் பதிவு முழுமை பெறும். இது ஆவணங்களின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த வழிமுறை தொடர்கிறது.
காகித வடிவிலான ஆவணங்களை மீண்டும் மீண்டும் கையாளுவதையும், அவற்றை ஸ்கேன் செய்வதையும் தவிர்ப்பதே இந்த டிஜிட்டல் மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் அரசு அலுவலகங்களில் ஆவணங்களைப் பராமரிக்கும் சுமை குறையும் மற்றும் பொதுமக்களுக்குக் கூடுதல் வெளிப்படைத்தன்மை கிடைக்கும். முன்னதாக, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மென்பொருள் மேம்படுத்தல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு, திட்டமிட்டபடி நவம்பர் 2-ஆம் தேதி முதல் இந்த புதிய வசதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.









