தமிழ்நாடு பிஎச்டி சேர்க்கை: மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு வழிகாட்டியைத் தேர்வு செய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் பிஎச்டி மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தகுதியின் அடிப்படையில் ஆய்வு வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறை அறிமுகமாகிறது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பிஎச்டி (PhD) ஆராய்ச்சி படிப்பில் சேரும் மாணவர்களுக்கான சேர்க்கை முறையை முற்றிலும் மாற்றியமைக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கையில் நிலவும் பாரபட்சத்தைத் தவிர்க்கவும், முறையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி, பிஎச்டி ஆய்வாளர்கள் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுவார்கள். இந்த தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் மாணவர்கள், காலியிடங்களுக்கு ஏற்ப தங்களுக்கு விருப்பமான ஆராய்ச்சி வழிகாட்டிகளைத் (Research Guides) தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விவாதிக்க மாநில பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுடன் உயர்கல்வித்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை திங்கட்கிழமை நடத்த உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் (Tansche) துணைத் தலைவர் எம்.பி. விஜயகுமார் கூறுகையில், தற்போதுள்ள நடைமுறையில் வெறும் தகுதித் தேர்வு மட்டுமே நடத்தப்படுவதாகவும், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள இந்த முறையில், நுழைவுத்தேர்வுடன் நேர்காணலும் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில் மாணவர்கள் தரவரிசைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்த தரவரிசை முறையானது, தகுதியான மாணவர்கள் சிறந்த வழிகாட்டிகளிடம் கல்வி கற்க வழிவகுக்கும்.
கடந்த பிப்ரவரி மாதம், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்காக ஒற்றைச் சாளர (Single-window) முறையை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது தரவரிசை முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கையை இன்னும் செம்மைப்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. மேலும், பிஎச்டி ஆய்வை முழுமையாக நிறைவு செய்யும் மாணவர்களின் விகிதம் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, சேர்க்கை முதல் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு வரை அனைத்து நிலைகளையும் கண்காணிக்க பிரத்யேகமான மென்பொருள் தளத்தை உருவாக்கவும் உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஆராய்ச்சித் துறையை மேம்படுத்தும் வகையில் மற்றொரு முக்கிய முயற்சியாக, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய இணையதளம் ஒன்றையும் அரசு உருவாக்க உள்ளது. இந்த இணையதளம் மூலம் கல்விசார் ஆராய்ச்சியாளர்களைத் தொழில்துறையுடன் (Industries) இணைக்க முடியும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார். இந்த முன்னெடுப்புகள் தமிழ்நாட்டின் ஆராய்ச்சி சூழலை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவும், தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.









