தமிழக காவல் நிலையங்களுக்கான நிதி ஒதுக்கீடு உயர்வு: அரசு அதிரடி உத்தரவு

தமிழக காவல் நிலையங்களுக்கான மாதாந்திர அவசரக்கால நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையிலும், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கோடும் மாதாந்திர அவசரக்கால நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கையின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யும் பொருட்டு காவல் நிலையங்களுக்குத் தேவையான கூடுதல் நிதி ஆதாரங்களை அரசு வழங்கியுள்ளது.
இந்த அரசாணையின்படி, தமிழகத்தில் உள்ள 1,917 காவல் நிலையங்களுக்கு ஆண்டுக்கு 71.01 கோடி ரூபாய் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக 2013-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நிதி அளவீடுகள், 2022-ஆம் ஆண்டு சிறு மாற்றங்களுடன் திருத்தப்பட்டிருந்தன. தற்போது விலைவாசி உயர்வு மற்றும் காவல் நிலையங்களின் பராமரிப்புச் செலவுகளைக் கருத்தில் கொண்டு இந்த நிதி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை காவல் நிலையங்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி, மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளிட்ட 1,169 சிறிய வகை காவல் நிலையங்களுக்கு மாதம் 3,750 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 353 நடுத்தர வகை காவல் நிலையங்களுக்கு 6,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும், மெட்ரோ-1 மற்றும் மெட்ரோ-2 நிலையங்கள் உட்பட 395 பெரிய வகை காவல் நிலையங்களுக்கு 8,250 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படுபவர்களுக்கு உணவு வழங்குதல், காவல் நிலைய வளாகத்தைப் பராமரித்தல் போன்ற அடிப்படைச் செலவுகளைச் செய்யக்கூட போதிய நிதி இல்லாமல் சிரமப்பட்ட காவலர்களுக்கு, இந்த கூடுதல் நிதி பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறை தலைவர் கேட்டுக் கொண்டபடி 11 வகையான சிறப்புப் பிரிவுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து, தனித்தனி முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு காவல்துறை தலைவரை அரசு அறிவுறுத்தியுள்ளது.









