தமிழ்நாட்டில் உணவகங்களில் அதிரடி ஆய்வு: செப்டம்பர் 1 முதல் 3 மாதங்களுக்கு தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் தரத்தை உறுதி செய்ய செப்டம்பர் 1 முதல் 3 மாத காலத்திற்கு தீவிர ஆய்வுப் பணி தொடங்குகிறது.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதி செய்யவும், சுகாதாரமான சூழலை பராமரிக்கவும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை மூன்று மாத காலத்திற்கு தீவிர ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளன. மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் ஆர். லால்வேனா பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இந்தச் சிறப்பு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுவாக, ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கும் மேல் விற்றுமுதல் கொண்ட மத்திய அரசின் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) உரிமம் பெற்ற நிறுவனங்களை மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. ஆனால், பொதுமக்களின் நலன் கருதி, தற்போது அந்த நிறுவனங்களையும் ஆய்வு செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இந்தத் தரக்கட்டுப்பாட்டு நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. உணவகங்கள், ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், கேன்டீன்கள், கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் சிறிய தேநீர் கடைகள் என உணவு தொடர்பான அனைத்து வணிகங்களும் இந்த ஆய்வின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள்: ஆய்வுப் பணிகளின் போது, சமையலறை மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் தூய்மை மிக முக்கியமாக கவனிக்கப்படும். பூச்சிக் கட்டுப்பாடு (Pest Control) முறை பின்பற்றப்படுகிறதா, குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா, குளிர்சாதனப் பெட்டிகள் உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறதா மற்றும் சமையலறைச் சுவர்களில் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கிறதா என்பது போன்ற அம்சங்கள் ஆய்வு செய்யப்படும். துருப்பிடிக்காத கத்திகள் மற்றும் வெட்டும் கருவிகளைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு கையாளும் பணியாளர்கள் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கையுறை, தலைக்கவசம் அணிந்து சுகாதாரமான முறையில் பணியாற்ற வேண்டும்.
ஆய்வின் போது உரிமம் இன்றி செயல்படும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படுவதோடு, உடனடியாக உரிமம் பெற வழிகாட்டப்படும். பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஆர்.யு.சி.ஓ (RUCO) நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறார்களா என்பதும் கண்காணிக்கப்படும். இந்த ஆய்வு குறித்த விவரங்கள் எஃப்.ஓ.எஸ்.கோ.ஆர்.ஐ.எஸ் (FoSCoRIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்படும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த ஆய்வு குறித்த முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட நியமன அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.









