தமிழ்நாடு முழுவதும் சாலை கட்டமைப்பு மேம்பாடு: 2,221 பணிகளுக்கு ரூ.6,513 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் 4,126 கி.மீ தொலைவிலான சாலைகளை மேம்படுத்த ரூ.6,513.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.6,513.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் மொத்தம் 2,221 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 4,126 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் நவீனப்படுத்தப்பட உள்ளன.
இந்த நிதி ஒதுக்கீட்டில், 589 மாநில நெடுஞ்சாலைப் பணிகளுக்காக ரூ.2,722.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய மாவட்ட சாலைகளுக்கான 419 பணிகளுக்கு ரூ.1,009.67 கோடியும், பிற மாவட்ட சாலைகளுக்கான 1,213 பணிகளுக்கு ரூ.2,781.47 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற இணைப்பு வசதியை மேம்படுத்தும் வகையில், 446 இடங்களில் ஒற்றை வழிப்பாதைகளை இடைநிலை வழிப்பாதைகளாக அகலப்படுத்தும் பணிகள் ரூ.1,924.20 கோடி மதிப்பீட்டில் 1,373.76 கிலோமீட்டர் தொலைவிற்கு மேற்கொள்ளப்படவுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சமாக, 84.86 கிலோமீட்டர் தொலைவிலான இருவழிப் பாதைகளை நான்கு அல்லது ஆறு வழிப்பாதைகளாக மாற்ற 28 பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், 492.46 கிலோமீட்டர் நீளமுள்ள ஒற்றை வழிப்பாதைகளைத் தார்ச்சாலையுடன் கூடிய இருவழிப் பாதைகளாக தரம் உயர்த்த ரூ.1,196.07 கோடி மதிப்பீட்டில் 188 பணிகள் நடைபெறவுள்ளன. சிவகாசி, பள்ளிகொண்டா, மன்னார்குடி, மயிலாடுதுறை மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் புதிய புறவழிச்சாலைகள் மற்றும் ரிங் ரோடுகள் அமைப்பதற்கான பணிகளும் இதில் அடங்கும்.
சாலைப் பணிகள் மட்டுமின்றி, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த மூன்று உயர்மட்டப் பாலங்கள் கட்டும் பணிகளுக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருத்தணி அருகே நெடுயம் காலனியை இணைக்கும் பாலம், அந்தியூர் பவானி ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் மற்றும் முதுகுளத்தூரில் உள்ள கீழகிடாரம்-வலிநோக்கம் சாலையில் ஒரு பாலம் என மொத்தம் ரூ.66.65 கோடி மதிப்பீட்டில் இந்த பாலங்கள் அமைகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணிகளும், முக்கிய இணைப்புகளை வலுப்படுத்தும் பணிகளும் இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் விரைவாகத் தொடங்கப்பட உள்ளன.









