தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மாற்றம்: 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம்

தமிழ்நாட்டில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. 'தமிழ்நாடு பாடத்திட்டக் கட்டமைப்பு-2025' (Tamil Nadu Curriculum Framework-2025) என்பதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய முறை, மனப்பாடம் செய்யும் பழக்கத்திலிருந்து மாணவர்களை விடுவித்து, அவர்கள் தாங்களாகவே தேடி கற்கும் ஆய்வு சார்ந்த அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவர்களின் விமர்சன ரீதியான சிந்தனை, சிக்கல்களைத் தீர்க்கும் திறன் மற்றும் பாடங்களை நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் திறனை மேம்படுத்துவதாகும். வகுப்பறைகளை மாணவர் மையப்படுத்திய சூழலாக மாற்றும் வகையில், பாடப் புத்தகங்களோடு இணைந்து 'நீங்களே செய்து பாருங்கள்' (Do it yourself) என்ற அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. குறிப்பாக, சமூக அறிவியல் பாடங்களில் வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்தல், தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகிய துறைகளை ஒன்றிணைக்கும் STEAM கல்வி முறை இந்த பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாடங்களுக்கு இடையிலான தொடர்பை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வதோடு, 21-ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான படைப்பாற்றல் மற்றும் தகவமைக்கும் திறனைப் பெற முடியும். மேலும், இன்றைய டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப டிஜிட்டல் கல்வியறிவு, இணையப் பாதுகாப்பு, தவறான தகவல்களை அடையாளம் காணுதல் மற்றும் வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணர்வு போன்றவை பாடத்திட்டத்தின் அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளன.
கல்வி மதிப்பீட்டு முறையிலும் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வெறும் தேர்வு அடிப்படையில் மட்டும் மாணவர்களை மதிப்பிடாமல், அவர்களின் திறமை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் மாணவர்களின் செயல்திட்டம் (Projects), திறன் சார்ந்த மதிப்பீடு மற்றும் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் கற்றல் நடவடிக்கைகள் அடங்கும். இந்த புதிய பாடத்திட்டம் குறித்த கருத்துக்களை கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.









