தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை: ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான புதிய மாறுதல் விதிகள் வெளியீடு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான பொது மாறுதல் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, மாநிலத்தில் பணியாற்றும் சுமார் 13,800-க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பொது மாறுதல் தொடர்பான புதிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான இந்த மாறுதல் செயல்முறையானது, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பான இமிஸ் (EMIS) இணையதளம் வாயிலாக முற்றிலும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜே. இன்னசென்ட் திவ்யா பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, பணியாளர்களுக்கான பொது மாறுதல் நடவடிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே நடைபெறும். ஒரு குறிப்பிட்ட அலுவலகத்தில் ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி மூன்று ஆண்டுகள் பணி முடித்தவர்கள், கட்டாய மாறுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேபோல், சொந்த விருப்பத்தின் பேரில் மாறுதல் கோருபவர்கள், தாங்கள் தற்போது பணியாற்றும் இடத்தில் குறைந்தது ஓராண்டு பணியாற்றி இருக்க வேண்டும். இவர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று இடங்களை முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டாய மாறுதல் விதியிலிருந்து சில பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் டி பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், ஆய்வக உதவியாளர்கள், நூறு சதவீதம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பணியாளர்கள் மற்றும் ஓராண்டு காலத்தில் ஓய்வுபெற உள்ள பணியாளர்களுக்கு இந்த இடமாற்ற விதி பொருந்தாது. இதுதவிர, மாற்றுத்திறனாளி பணியாளர்கள், மாற்றுத்திறனாளி அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், டயாலிசிஸ், இதய அறுவை சிகிச்சை அல்லது புற்றுநோய் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கப்படும்.
பாதுகாப்புப் படையில் பணிபுரிபவர்களின் துணைவர்கள், விதவைகள், 40 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள் மற்றும் தம்பதிகள் இருவரும் 30 கிலோமீட்டருக்கு மேல் இடைவெளியில் பணிபுரிபவர்களுக்கும் இந்த முன்னுரிமை பொருந்தும். பணியாளர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கைகளையும், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிர்வாகச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையும், பணியாளர்களுக்கு ஏதுவான சூழலும் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.









