தமிழ்நாடு பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு திட்டம்: 7.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த 7.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக 'போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு பள்ளி முன்முயற்சி' (Drug-Free Tamil Nadu School Initiative) திட்டத்திற்கு 7.2 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 2026-27 ஆம் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம், போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் அபாயத்தில் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனை மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சைகளை வழங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 7,208 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பயனடைய உள்ளன. ஒவ்வொரு பள்ளிக்கும் விழிப்புணர்வு பேரணிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்களை நடத்துவதற்காக தலா 10,000 ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில், சுமார் 6,300 தனியார் பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகள் வளாகத்திற்குள் போதைப்பொருள் தடுப்பு மன்றங்களை அமைப்பதோடு, அரசு அறிவித்துள்ள 10581 என்ற உதவி எண் குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் போதைப்பொருள் விற்பனை அல்லது கடத்தல் குறித்து ரகசியமாகத் தகவல் தெரிவிக்க 'போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு' (Drug-Free Tamil Nadu) என்ற பிரத்யேக மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் புகார் அளிப்பவர்களின் அடையாளம் மிக ரகசியமாக வைக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் அமைக்கப்படும் மாவட்ட அளவிலான குழுக்கள், இதற்கான கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளும். இக்குழுக்களில் காவல்துறை, பள்ளிக்கல்வி, சுகாதாரம், சமூக நலத்துறை மற்றும் குழந்தை பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
அதேபோல், போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை காலாண்டுக்கு ஒருமுறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இக்குழுக்களில் சிறார் நீதி வாரியம் மற்றும் குழந்தை நலக் குழுவின் பிரதிநிதிகளும் இடம் பெறுவார்கள். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த முயற்சியானது, கல்விச் சூழலில் போதைப்பொருட்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.









