dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வாரத்தில் மூன்று நாட்கள் உடற்கல்வி கட்டாயம்: புதிய கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர்

By Admin
14/10/2026
42 views
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வாரத்தில் மூன்று நாட்கள் உடற்கல்வி கட்டாயம்: புதிய கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர்

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜமோகன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் உடல்நலம் மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், வாரத்தில் மூன்று நாட்கள் உடற்கல்வி வகுப்புகளை நடத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜமோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கல்விசார்ந்த செயல்பாடுகளுடன் உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் புதிய கால அட்டவணையை அரசு அறிமுகம் செய்துள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி, முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினசரி கடைசியாக ஒதுக்கப்பட்டுள்ள உடற்கல்வி வகுப்பு 45 நிமிடங்களாக இருக்கும். மேலும், மதியம் 1.20 மணி முதல் 1.45 மணி வரையிலான நேரம் நூலகம் மற்றும் மதிப்புக்கல்வி பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்விக்காக கூடுதலாக இரண்டு பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு பாடவேளை உடற்கல்விக்காக வழங்கப்படுகிறது.

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாராந்திர கால அட்டவணையில் உள்ள 40 பாடவேளைகளில், 32 பாடவேளைகள் முக்கிய பாடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள எட்டு பாடவேளைகளில், உடற்கல்வி வகுப்புகள் இரண்டிலிருந்து மூன்றாக உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றுடன், துணைப்பாட செயல்பாடுகள், கூடுதல் கல்வி செயல்பாடுகள் மற்றும் தமிழ்நாடு ஸ்பார்க் (TN SPARK) திட்டத்திற்காக தலா இரண்டு பாடவேளைகளும், நூலகம் மற்றும் மதிப்புக்கல்விக்காக ஒரு பாடவேளையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைப்பாட செயல்பாடுகள் மற்றும் கூடுதல் கல்வி செயல்பாடுகளுக்காக நான்கு பாடவேளைகள் வழங்கப்பட்டுள்ளன.

பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருப்பது போல வாரத்திற்கு இரண்டு உடற்கல்வி வகுப்புகள் மற்றும் தலா இரண்டு துணைப்பாட, கூடுதல் கல்வி செயல்பாட்டு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாதது குறித்த கவலைகளுக்கு பதிலளித்த அமைச்சர், காலியாக உள்ள 6,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளித்தார். மேலும், பள்ளி விளையாட்டு மைதானங்களின் வசதிகளை மேம்படுத்த விளையாட்டுத் துறையுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகம்
#அரசுப்பள்ளிகள்
#உடற்கல்வி
#பள்ளிக்கல்வித்துறை
#மாணவர்கள்
#TamilNaduEducation
#TNGovtSchools
#PhysicalEducation
#SchoolEducationMinister
#StudentWelfare
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications