தமிழ்நாட்டில் கட்டிடத் திட்ட அனுமதி பெறுவது எளிது: தனியார் சான்றளிப்பவர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி பெற தனியார் சான்றளிப்பவர்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டிடத் திட்ட அனுமதி பெறுவதை எளிதாக்கும் வகையில், இனி தனியார் சான்றளிப்பவர்களும் கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அக்டோபர் 7-ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையின்படி, இனி மக்கள் கட்டிட அனுமதி பெற உள்ளாட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் குறையும். இந்த புதிய நடைமுறை குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில் சார்ந்த கட்டிடங்களுக்குப் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகுதிவாய்ந்த கட்டிடக் கலைஞர்கள் அல்லது தரம்-1 பதிவு பெற்ற பொறியாளர்கள் மூன்றாம் தரப்பு சான்றளிப்பவர்களாகச் செயல்படுவார்கள். இவர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்களைச் சரிபார்த்து, விதிகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகு மின்னணு முறையில் சான்றிதழ்களை வழங்குவார்கள். குறிப்பாக, 750 சதுர மீட்டர் (8,070 சதுர அடி) வரையிலான குடியிருப்பு கட்டிடங்கள், 300 சதுர மீட்டர் (3,230 சதுர அடி) வரையிலான வணிகக் கட்டிடங்கள் மற்றும் சிட்கோ, சிப்காட், எல்காட் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்பேட்டைகளில் 2,500 சதுர மீட்டர் (26,900 சதுர அடி) வரையிலான தொழில்முறை கட்டிடங்களுக்கு இந்த புதிய வசதி பொருந்தும்.
இதனுடன் கூடுதலாக, அக்டோபர் 8-ம் தேதி வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையின் வாயிலாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகார வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கான அனுமதி வரம்பு முன்பு 10,000 சதுர அடியாக இருந்த நிலையில், அது தற்போது 16,140 சதுர அடியாக (1,500 சதுர மீட்டர்) உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் இந்த வரம்பு 12,912 சதுர அடியாக (1,200 சதுர மீட்டர்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறிய வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குப் பயன் அளிக்கும் வகையில், வணிகக் கட்டிடங்களுக்கான அனுமதி வரம்பும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுவானதாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு 2,000 சதுர அடியாக இருந்த வணிகக் கட்டிடங்களுக்கான அனுமதி வரம்பு, தற்போது 5,380 சதுர அடியாக (500 சதுர மீட்டர்) உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் இந்தத் துரிதமான நடவடிக்கையானது கட்டிட கட்டுமான அனுமதிகளைப் பெறுவதில் உள்ள காலதாமதத்தைத் தவிர்த்து, வெளிப்படையான முறையில் விரைவான சேவையைப் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.









