தமிழ்நாடு ஸ்டார் 3.0 திட்ட டெண்டர் அறிவிப்பு: ஆவண எழுத்தாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு

பதிவுத்துறை கொண்டுவந்துள்ள ஸ்டார் 3.0 திட்ட டெண்டர் அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆவண எழுத்தாளர்கள் சங்கம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத்துறையின் கீழ் ஸ்டார் 3.0 திட்டத்தை செயல்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட டெண்டர் அறிவிப்புக்கு எதிராக, ஆவண எழுத்தாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளது. காகிதமில்லா மற்றும் நேரில் வர வேண்டிய அவசியமில்லாத பதிவு முறையை உருவாக்கும் நோக்கில், பதிவுத்துறை 25 மாதிரி பதிவு மையங்களை (Model Registration Hubs) அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கான சேவை வழங்குநரைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, மதுரை மாவட்ட ஆவண எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் யு. ராஜமாணிக்கம் தாக்கல் செய்த மனுவில், கடந்த அக்டோபர் 28-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே, அக்டோபர் 16-ம் தேதியன்று கூடுதல் பதிவுத்துறை தலைவர் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது விதிமுறை மீறல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நடைமுறையில், தமிழ்நாடு டெண்டர் ஒளிவுமறைமை விதிகள் 2000-ன் படி, உள்நாட்டு நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய முன்னுரிமைகள் சேர்க்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த மாதிரி பதிவு மையங்கள் செயல்படத் தொடங்கினால், தற்போது பணிபுரிந்து வரும் சுமார் 5,500 உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை சங்கம் வெளிப்படுத்தியுள்ளது. புதிதாக அமல்படுத்தப்படவுள்ள இந்த மையங்களில் ஆவணங்களைத் தயாரிப்பது மற்றும் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆவண எழுத்தாளர்களின் பங்கு என்ன என்பது குறித்த தெளிவான அறிவிப்பு டெண்டர் நிபந்தனைகளில் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த டெண்டர் நடைமுறையில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய முன்னுரிமை விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதும் முக்கிய வாதமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன்னிலையில், அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், டெண்டர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் அறிவிப்பின்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 16-ம் தேதியும், ஏலங்களை திறக்க நவம்பர் 17-ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.









