தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரியம் மறுசீரமைப்பு: புதிய உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பொறுப்புகள் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு மாநில வனவிலங்கு வாரியத்தை மறுசீரமைப்பு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, மாநிலத்தின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இந்த வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சர் வாரியத்தின் துணைத் தலைவராகச் செயல்படுவார். முந்தைய வாரியத்தின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில் சட்டமன்ற உறுப்பினர்களான காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ எம்.சுதாகர், மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ எஸ்.கார்த்திகேயன் மற்றும் திரு.வி.க. நகர் தொகுதி எம்.எல்.ஏ எம்.ஆர்.பல்லவி ஆகியோர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாக வைல்ட்லைப் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் ஜோஸ் லூயிஸ், நேச்சர் கன்சர்வேஷன் ஃபவுண்டேஷனின் டி.ஆர்.சங்கர் ராமன் மற்றும் ஓம்கார் அறக்கட்டளையின் பாலாஜி வேதராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வாரியத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி மற்றும் வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் வாரியத்தில் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர, சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) சார்பில் யாஷ் வீர் பட்நாகர், வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் விஞ்ஞானி ஆர்.சுரேஷ் குமார் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) சி.ஸ்ரீகுமார் ஆகிய நிபுணர்களும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரியத்தின் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், வனம், சமூக நீதி மற்றும் மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாகப் பணியாற்றுவார்கள். பாதுகாக்கப்பட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் நிர்வகித்தல், வனவிலங்கு பாதுகாப்பு சட்ட அட்டவணையில் மாற்றங்கள் செய்தல், வனத்தை ஒட்டி வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் வனவிலங்கு பாதுகாப்பையும் சமநிலைப்படுத்துதல் போன்ற முக்கிய ஆலோசனைகளை இந்த வாரியம் அரசுக்கு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









