தமிழக டாஸ்மாக் கடைகளில் புதிய நடைமுறை: ரூ.1,000-க்கு மேல் மது வாங்கினால் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மதுபான விற்பனை கழகமான டாஸ்மாக், தனது சில்லறை விற்பனை கடைகளில் பணம் செலுத்தும் முறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மது வாங்கும் நுகர்வோர், பணமாக வழங்காமல் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கே. நந்தகுமார் அக்டோபர் 26-ம் தேதியன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்படவுள்ளன. முதல் கட்டமாக நவம்பர் மாதம் முதல் ரூ.1,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த வரம்பு ரூ.500-ஆக குறைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,048 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நவம்பர் 1-ம் தேதிக்குள் அந்தந்த வங்கிகளின் மூலம் இயங்கும் விற்பனை முனையங்கள் எனப்படும் பி.ஓ.எஸ் இயந்திரங்கள் சரியாகச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால், அவற்றை உடனடியாகச் சரிசெய்யும் வகையில் சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையைச் செயல்படுத்துவதில் எந்தவித சுணக்கமும் இருக்கக்கூடாது என்பதில் டாஸ்மாக் நிர்வாகம் உறுதியாக உள்ளது. மாவட்ட அளவிலான அதிகாரிகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் இந்த டிஜிட்டல் கட்டண முறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் சீரமைப்பதன் மூலம் விற்பனையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், பணப்பரிமாற்றங்களை முறைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.









