தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளின் பராமரிப்பு நிதி உயர்வு: அக்டோபர் 1 முதல் அமல்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளைப் பராமரிக்க மாதம் ரூ.5,000 வரை நிதியை ஒதுக்கீடு செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளை (டாஸ்மாக்) முறையாகப் பராமரிப்பதற்கும், தூய்மையைப் பேணுவதற்கும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை கடை ஒன்றிற்கு மாதம் 750 ரூபாய் மட்டுமே சிறு செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி புதிய நடைமுறையின்படி அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை வழங்கப்பட உள்ளது. இந்த புதிய அரசாணை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த நிதி ஒதுக்கீடானது கடைகள் அமைந்துள்ள இடத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மாதம் 5,000 ரூபாயும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இயங்கும் கடைகளுக்கு மாதம் 4,000 ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கிராம ஊராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் கடைகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே. நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு செய்யப்படும் இந்தத் தொகையை கடையின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரித்தல், குடிநீர் வசதி செய்தல் மற்றும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் போன்ற பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், கடையின் வாடகை, மின்சாரக் கட்டணம், கட்டிடப் பழுதுபார்ப்பு, தளவாடங்கள் வாங்குதல் போன்ற செலவுகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தக்கூடாது என்று நிர்வாகம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. ஒருவேளை கடை ஒரு மாதம் முழுவதும் செயல்படாமல் இருந்தால், அந்த மாதத்திற்கான தொகை வழங்கப்படாது, ஆனால் அந்த நிதியை அடுத்த மாதம் பயன்படுத்திக்கொள்ள அனுமதி உண்டு.
இந்த நிதியானது அந்தந்த டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளரின் ஊதியத்துடன் இணைத்து மாதந்தோறும் வழங்கப்படும். செலவு செய்யப்படும் தொகைகள் குறித்த கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், ரசீதுகளை மூன்று ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பராமரிப்பு நிதித் தொகையானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.









