தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் இனி சில்லென்று பீர்: அனைத்து கடைகளிலும் குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்த திட்டம்

தமிழ்நாட்டில் கோடை காலத்தை முன்னிட்டு 4,048 டாஸ்மாக் கடைகளில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய குளிர்சாதனப் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களிலும் குளிரூட்டப்பட்ட பீர் விற்பனையை உறுதி செய்யும் நோக்கில், குளிர்சாதனப் பெட்டிகளை (Freezers) நிறுவ தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) முக்கிய முடிவை எடுத்துள்ளது. கோடை காலத்தில் பீர் நுகர்வு கணிசமாக அதிகரிக்கும் என்பதால், சுமார் 4,048 விற்பனை நிலையங்களில் இந்த வசதியை ஏற்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு கடையின் விற்பனைத் திறனை அடிப்படையாகக் கொண்டு, அங்கு எத்தனை குளிர்சாதனப் பெட்டிகள் தேவை என்பதை டாஸ்மாக் நிர்வாகம் வகைப்படுத்தியுள்ளது. தினசரி 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யும் கடைகள் 'ஏ' பிரிவு என்றும், 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யும் கடைகள் 'பி' பிரிவு என்றும், 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக விற்பனை செய்யும் கடைகள் 'சி' பிரிவு என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட மேலாளர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட கடைகளை ஆய்வு செய்து, தேவை குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் சுமார் 2,000 நகர்ப்புற டாஸ்மாக் கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை தற்போது முறையாகச் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு, புதிய குளிர்சாதனப் பெட்டிகளை படிப்படியான முறையில் நிறுவ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய முயற்சி மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரமான குளிரூட்டப்பட்ட மதுபானங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கான புதிய சீருடை நடைமுறை தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நவம்பர் 15-ம் தேதி முதல் ஊழியர்கள் சீருடை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்காக ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் சீருடை அலவன்ஸை அரசு ஒதுக்கியுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் மூலம் இந்த சீருடைகளை கொள்முதல் செய்து, ஊழியர்களுக்கு வழங்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, அங்கீகரிக்கப்படாத பார்கள் மூலம் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.









