தமிழகத்தில் 500 விளையாட்டு மைதானங்கள் மேம்பாடு: புதிய விளையாட்டு சட்டமும் அரசின் முக்கிய அறிவிப்புகள்!

தமிழகத்தில் 500 விளையாட்டு மைதானங்களை தரம் உயர்த்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 'அனைவருக்கும் விளையாட்டு' திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்டு, விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 'அனைவருக்கும் விளையாட்டு' (Play for All) என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ஊரக ஊராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் 500 விளையாட்டு மைதானங்கள் கண்டறியப்பட்டு, அவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் (SDAT) இணைக்கப்படும். இந்த மைதானங்களை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, 'தமிழ்நாடு விளையாட்டுச் சட்டம்' (Tamil Nadu Sports Act) விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், அனைத்து மாநில விளையாட்டு அமைப்புகளும் கட்டாய நிதி தணிக்கைக்கு உட்படுத்தப்படும். மேலும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் வெளிப்படையான முறை அமல்படுத்தப்படும். குறிப்பாக, பெண் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புகார்களை விசாரிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளகக் குறைதீர்ப்புக் குழுக்கள் (Internal Complaints Committees) அமைக்கப்படுவது இச்சட்டத்தின் சிறப்பம்சமாகும்.
2036-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, 5 கோடி ரூபாய் செலவில் 'SDAT திறமை ஆராய்ச்சிப் பிரிவு' (Talent Research Wing - TRW) தொடங்கப்பட உள்ளது. இப்பிரிவானது பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செயல்படும். இதன் மூலம் 8 முதல் 18 வயது வரையிலான திறமையான சிறுவர் மற்றும் சிறுமியர் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். வருங்கால சாம்பியன்களை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது.
மேலும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு ஒதுக்கீட்டின் (3% sports quota) கீழ் பணிபுரியும் வீரர்களுக்குக் கூடுதல் ஊக்கமளிக்கும் வகையில் புதிய கொள்கை உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம், விளையாட்டு வீரர்கள் தங்களின் பயிற்சிக்குத் தேவையான விடுமுறை மற்றும் தினசரி பயிற்சி நேரங்களைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்க வேண்டும் என்பதற்காகவும், அடிமட்ட அளவில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும் இத்தகைய திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.









