தமிழ்நாட்டில் அதிகரித்த காற்றாலை மின் உற்பத்தி: ஆகஸ்டில் புதிய சாதனை படைத்த தமிழகம்

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி 3.3 சதவீத உயர்வை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின்சாரத்தின் பங்கு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் (TNGECL) சமீபத்திய தரவுகளின்படி, நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலக்கட்டத்தில் மாநிலத்தின் காற்றாலை மின் உற்பத்தி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 3.31 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மொத்தம் 10,446 மில்லியன் யூனிட்கள் (MU) மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 10,112 மில்லியன் யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் காற்றாலை மின் உற்பத்தி சற்று மந்தமாகவே இருந்தது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதமும், மே மாதத்தில் 27.2 சதவீதமும், ஜூன் மாதத்தில் 22.2 சதவீதமும் உற்பத்தி குறைந்து காணப்பட்டது. இந்த முதல் மூன்று மாதங்களில் ஒட்டுமொத்தமாக 3,601.4 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது, இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டு உற்பத்தியை விட சுமார் 22.7 சதவீதம் குறைவாகும். இருப்பினும், ஜூலை மாதம் முதல் இந்த நிலைமை முழுமையாக மாறியது.
ஜூலை மாதத்தில் காற்றாலை மின் உற்பத்தி 11 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து 3,401 மில்லியன் யூனிட்களை எட்டியது. ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பான மாற்றமாக, உற்பத்தி 43 சதவீதம் உயர்ந்து 3,444 மில்லியன் யூனிட்களாக அதிகரித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2,408 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக 142.430 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, இது தமிழக வரலாற்றிலேயே புதிய சாதனையாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 2025-இல் 123.8 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமை ஆலோசகர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே. வெங்கடாசலம் கூறுகையில், பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு கொள்கைக்காகக் காத்திருக்காமல், காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் நிலவிய வலுவான காற்று மற்றும் சாதகமான வானிலை சூழலே இந்த அபரிமிதமான மின் உற்பத்திக்கு முக்கிய காரணமாக அமைந்தது என பசுமை எரிசக்தி கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









