தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள்: ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடக்கம் - சிஏஜி அறிக்கை

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் திட்டம் தொடங்கப்பட்டு சுமார் பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்தத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்ட பல பணிகள் இன்னும் முழுமையடையாமல் கிடப்பில் இருப்பது மத்திய கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 11 ஸ்மார்ட் நகரங்களில் மொத்தம் 243 திட்டங்கள் திட்டமிடப்பட்ட நிலையில், அவற்றில் 52 திட்டங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் அப்படியே உள்ளன. இந்தத் திட்டங்களின் மதிப்பு சுமார் 1,602 கோடி ரூபாயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தணிக்கையானது சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, சேலம், திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளை உள்ளடக்கி, 2015-16 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவலாக, திட்டமிடப்படாத 44 புதிய பணிகள் சுமார் 623 கோடி ரூபாய் செலவில் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வழிகாட்டுதல்களை மீறி, மாநகராட்சிகளே வழக்கமாகச் செய்ய வேண்டிய சாதாரண பணிகளும் இந்த நிதியிலிருந்து செலவிடப்பட்டுள்ளது தணிக்கையில் அம்பலமாகியுள்ளது.
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் நிறைவேறாதது குறித்து விரிவாகக் குறிப்பிடும் சிஏஜி அறிக்கை, சென்னையின் 248 கோடி ரூபாய் மதிப்பிலான தெருவிளக்கு கண்காணிப்பு அமைப்பு மற்றும் கோயம்புத்தூரின் 120 கோடி ரூபாய் மதிப்பிலான வடிகால் திட்டம் போன்றவை இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நான்கு மாநகராட்சிகளில் அமைக்கப்பட்ட பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள், மின் இணைப்பு தாமதம் மற்றும் லிஃப்ட் வசதி இல்லாதது போன்ற காரணங்களால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நோக்கம் கொண்ட நிறுவனங்கள் (SPVs), தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளாகச் செயல்படாமல், வெறும் நிதி வழங்கும் முகமைகளாக மட்டுமே மாறியுள்ளதாக சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. அந்த நிறுவனங்களின் வருவாய் ஆதாரங்கள் மாநகராட்சிகளாலேயே தக்கவைக்கப்படுவதால் அவற்றின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கொரு தீர்வாக, முழுநேர தலைமைச் செயல் அதிகாரிகளை நியமிப்பது, மாநகராட்சிகளுடனான வருவாய் பகிர்வு ஒப்பந்தங்களை முறைப்படுத்துவது மற்றும் டெண்டர் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது போன்ற பரிந்துரைகளை சிஏஜி அரசுக்கு வழங்கியுள்ளது.









