கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற தமிழக சபாநாயகர்: கடும் விமர்சனங்களை முன்வைக்கும் பாஜக

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்றது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெற்ற கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்துகொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் உயர் மறைமாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் கீழ் இயங்கும் 'கேரிஸ் இந்தியா' அமைப்பு ஒருங்கிணைத்திருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சபாநாயகர், கருக்கலைப்புக்கு எதிரான தனது கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.
பேரணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜே.சி.டி. பிரபாகர், கருக்கலைப்பு எந்தச் சூழலிலும் நடைபெறக்கூடாது என்பதில் கத்தோலிக்க திருச்சபை சமூகத்தினர் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் பரிசு என்றும், அதை ஒவ்வொரு குடும்பமும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் 'கருக்கலைப்பு என்பது கொலை' மற்றும் 'வாழ்வை மதியுங்கள்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
சபாநாயகரின் இந்த செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி மிக உயரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், தனிப்பட்ட மத நம்பிக்கைகளை முன்னிலைப்படுத்தி இத்தகைய போராட்டங்களில் பங்கேற்பது ஏற்புடையதல்ல என்று அவர் விமர்சித்துள்ளார். உச்ச நீதிமன்றம் வழங்கிய பல முக்கியத் தீர்ப்புகள், பெண்களின் உடல் தன்னாட்சி மற்றும் தனிநபர் சுதந்திரத்தை அங்கீகரித்துள்ள நிலையில், சபாநாயகரின் கருத்து அந்த உரிமைகளைப் பாதிப்பதாக உள்ளது என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சபாநாயகர் என்பவர் சட்டத்தின் பாதுகாவலராகச் செயல்பட வேண்டுமே தவிர, ஒரு மதத்தின் பிரதிநிதியாகச் செயல்படக்கூடாது என்று நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் முற்போக்குச் சிந்தனை மற்றும் சமூக நீதிப் பாரம்பரியத்திற்கு எதிராக இந்தச் செயல் அமைந்திருப்பதாகவும், இது சபாநாயகர் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே சட்டப்பேரவையில் விவிலிய வசனங்களைப் பயன்படுத்தியதாக எழுந்த விமர்சனங்களை நினைவுபடுத்திய நயினார் நாகேந்திரன், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிப்பது சபாநாயகரின் கடமை என்று வலியுறுத்தியுள்ளார்.









