உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய தனிஷா - துருவ் ஜோடி

பி.டபிள்யூ.எஃப் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ மற்றும் துருவ் கபிலா ஜோடி ப்ரீ-குவார்ட்டர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
டெல்லியில் நடைபெற்று வரும் பி.டபிள்யூ.எஃப் (BWF) உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் நட்சத்திர கலப்பு இரட்டையர் ஜோடியான தனிஷா கிராஸ்டோ மற்றும் துருவ் கபிலா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில், லியோங் லோக் சோங் மற்றும் என்.ஜி வெங் சி ஆகியோரை எதிர்த்து விளையாடிய இந்திய ஜோடி, 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்குகளில் எளிதாக வெற்றி பெற்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
நீண்ட காலமாக கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லாத குறையைத் தீர்க்கும் முயற்சியில் தனிஷா மற்றும் துருவ் ஜோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வரும் இந்த ஜோடி, தற்போது பயிற்சியாளர் டான் கிம் ஹெரின் வழிகாட்டுதலில் தங்கள் விளையாட்டு நுணுக்கங்களை மாற்றியமைத்துள்ளனர். குறிப்பாக, தனிஷாவின் ஆக்ரோஷமான ஆட்டமும், மைதானத்தின் பெரும்பகுதியைத் துல்லியமாகக் கையாளும் துருவின் நுட்பமும் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தனிஷா மற்றும் துருவ் இருவரும் மற்ற இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்பதைத் தவிர்த்து, இந்த கலப்பு இரட்டையர் பிரிவில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். பயிற்சியாளர் டான் கிம் ஹெர் இவர்களின் உடல் வலிமையை அதிகரிப்பதோடு, மைதானத்தில் வேகமாக நகர்வதற்கான நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்துள்ளார். தங்களின் விளையாட்டு முறையில் உள்ள ஏற்ற இறக்கங்களைக் குறைத்து, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய இலக்கு என துருவ் கபிலா தெரிவித்துள்ளார்.
போட்டிகளில் வெற்றி பெறும்போது அதிகப்படியான மகிழ்ச்சியையோ அல்லது தோல்வியின்போது அதிகப்படியான சோர்வையோ காட்டாமல், மன ரீதியான சமநிலையைப் பேணுவதில் இந்த ஜோடி அதிக கவனம் செலுத்தி வருகிறது. வரும் சுற்றுகளில் இவர்களுக்குப் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக, அடுத்த சுற்றில் சீனா சார்பில் களமிறங்கும் ஆறாம் நிலை வீரர்களான குவோ ஜின் வா மற்றும் சென் ஃபாங் ஹுய் ஆகியோரை எதிர்கொள்ளவிருக்கின்றனர். கடந்த ஆண்டின் வெண்கலப் பதக்கத்தை வென்ற சீன ஜோடிக்கு எதிராக, இந்திய அணி வீரர்கள் தங்கள் முழு பலத்தையும் வெளிப்படுத்தத் தயாராகி வருகின்றனர்.









