dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடுவணிகம்

தமிழகத்தில் 11 மதுபான பிராண்டுகள் விற்பனைக்கு அதிரடி தடை: டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய உத்தரவு

By Admin
15/08/2026
230 views
தமிழகத்தில் 11 மதுபான பிராண்டுகள் விற்பனைக்கு அதிரடி தடை: டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய உத்தரவு

தமிழகத்தில் 11 மதுபான பிராண்டுகளில் செயற்கை சுவையூட்டிகள் கலந்திருப்பதை உணவு பாதுகாப்புத் துறை கண்டறிந்ததையடுத்து, அவற்றின் விற்பனைக்கு டாஸ்மாக் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் தரம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியைச் சேர்ந்த என்ரிகா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 11 வகையான மதுபானங்களில், இயற்கையான சுவைக்கு மாற்றாக செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்டிருப்பது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த 11 பிராண்டுகளையும் உடனடியாக விற்பனை செய்வதையும், இடமாற்றம் செய்வதையும் நிறுத்தும்படி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார் வெளியிட்டுள்ளார். இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விஎஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டோவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி, எண்.1 மெக்டோவல்ஸ் ஃபைன் பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்சு பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 பிராண்டுகளின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி என்ரிகா என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமம் பெற்ற வளாகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தென் மண்டல அலுவலக அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகளைத் தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு இது குறித்து கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த பிராண்டுகளை கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பவோ அல்லது பொதுமக்களுக்கு விற்பனை செய்யவோ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, அரசு அனுமதி பெற்ற எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 உரிமதாரர்களுக்கு கூட இந்த குறிப்பிட்ட பிராண்டுகளை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை இந்த விற்பனைத் தடை அமலில் இருக்கும். மாநிலம் முழுவதும் உள்ள 4,045 மதுபானக் கடைகள் மற்றும் 43 டாஸ்மாக் கிடங்குகளில் சுமார் 20,000 மதுபான பெட்டிகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட மதுபான பிராண்டுகள் தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளதாகக் கருதப்படுவதால், இந்த முடிவு பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#டாஸ்மாக்
#தமிழகம்
#மதுபானம்
#உணவுபாதுகாப்பு
#செய்திகள்
#TASMAC
#TamilNadu
#LiquorNews
#FSSAI
#BreakingNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications