ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக களமிறங்கும் தேஜா சஜ்ஜா: தி டிரேட்டர்ஸ் தெலுங்கு தொடர் அறிவிப்பு

பிரபல நடிகர் தேஜா சஜ்ஜா தொகுத்து வழங்கும் தி டிரேட்டர்ஸ் தெலுங்கு ரியாலிட்டி ஷோ, அக்டோபர் 15 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலர் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது இளம் நடிகர் தேஜா சஜ்ஜாவும் இணைந்துள்ளார். ஹனு-மேன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பெரும் புகழ்பெற்ற தேஜா சஜ்ஜா, தற்போது ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாக உள்ள தி டிரேட்டர்ஸ் தெலுங்கு தொடரின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகிறார். இந்தத் தொடர் அக்டோபர் 15, 2026 அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற தி டிரேட்டர்ஸ் நிகழ்ச்சியின் தெலுங்கு தழுவலாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியில் ஏற்கனவே இரண்டு சீசன்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அதே உற்சாகத்துடன் தெலுங்கு ரசிகர்களுக்காக பிரைம் வீடியோ இதனை கொண்டு வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோ மொத்தம் 10 அத்தியாயங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு வாரங்களாக ஒளிபரப்பாக உள்ள இந்தத் தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகும்.
சோல் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 20 பிரபலங்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கி, வஞ்சகம், தந்திரமான மூளை விளையாட்டுகள் மற்றும் சவாலான போட்டிகளில் ஈடுபடுவார்கள். நம்பிக்கையை மையமாகக் கொண்ட இந்த ஆட்டத்தில், ஒரு நொடி தங்களின் பலமாக இருக்கும் விஷயம், அடுத்த நொடியே பலவீனமாக மாறக்கூடும் என்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். நடிகர் தேஜா சஜ்ஜாவின் தனித்துவமான ஆற்றலும், துடிப்பும் இந்தத் தொடருக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அமேசான் பிரைம் வீடியோ மற்றும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவுத் தலைவர் நிகில் மதுக் கூறுகையில், தி டிரேட்டர்ஸ் தெலுங்கு என்பது ஒரு துணிச்சலான மற்றும் சுவாரஸ்யமான ரியாலிட்டி ஷோ என்று குறிப்பிட்டுள்ளார். மனோதத்துவ ரீதியிலான விளையாட்டுகள் மற்றும் உத்திகள் நிறைந்த இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என்றார். தேஜா சஜ்ஜாவை தொகுப்பாளராக தேர்வு செய்தது மிகச்சரியான முடிவு என்றும், அவரது இயல்பான ஈர்ப்பு மற்றும் ரசிகர்களுடனான தொடர்பு இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.









