dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தென்காசி அரசு மருத்துவமனை பணி நியமன முறைகேடு: இணை இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை

By Admin
09/09/2026
53 views
தென்காசி அரசு மருத்துவமனை பணி நியமன முறைகேடு: இணை இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை

தென்காசி அரசு மருத்துவமனைகளில் பணியாளர் நியமனத்தில் முறைகேடு செய்ததாக இணை இயக்குநர் உட்பட 4 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 2023-ம் ஆண்டு சமையலர் மற்றும் சலவை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் மூன்று அலுவலகப் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் (DMS) உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் ஏ. ராஜமோகன், தென்காசி இணை இயக்குநர் டாக்டர் பி. பிரேமலதா, அலுவலக கண்காணிப்பாளர்கள் ஆர். மீனா மற்றும் எம். லோகநாயகி, மற்றும் உதவியாளர் ஜி. நித்யா ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் ஒழுங்குமுறை மற்றும் மேல்முறையீட்டு விதிகள் (Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules) கீழ் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி இணை இயக்குநர் மற்றும் கூடுதல் மருத்துவப் பணிகள் இயக்குநர் ஆகியோர் நடத்திய விசாரணையின் அடிப்படையிலேயே இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்களில் இன சுழற்சி முறையைப் பின்பற்றாததும், வேலைவாய்ப்புத் துறையின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தியதும் முக்கிய குற்றச்சாட்டுகளாக உள்ளன. 2009-ம் ஆண்டு அரசாணையின்படி, சமையலர் மற்றும் சலவை உதவியாளர் ஆகிய இரண்டு பணிகளுக்கும் தனித்தனியாக இன சுழற்சி முறையைப் பின்பற்றியிருக்க வேண்டும், ஆனால் அது முறையாகச் செய்யப்படவில்லை. மேலும், அலுவலகத்தில் இன சுழற்சி பதிவேடு பராமரிக்கப்படாததும், முந்தைய நியமனங்கள் குறித்த ஆவணங்கள் இல்லாததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேர்காணலுக்கு 150-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில், மற்றொரு குறிப்பில் 220 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. தகுந்த காரணமின்றி 37 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணி நியமனத்திற்குத் தேவையான கல்வித் தகுதியிலும் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. பணி விதிகளின்படி விண்ணப்பதாரர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று இருக்கும் நிலையில், அறிவிப்பில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அலுவலகக் குறிப்புப் பக்கங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை, பல ஆவணங்களில் கையொப்பங்கள் விடுபட்டுள்ளன. பணியமன ஆணையில், நியமன அதிகாரம் கொண்ட இணை இயக்குநரின் கையொப்பத்திற்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியரின் கையொப்பம் இடப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகள் இந்த விசாரணையில் அம்பலமாகியுள்ளன.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தென்காசி
#அரசுப்பணி
#முறைகேடு
#சுகாதாரத்துறை
#செய்தி
#Tenkasi
#HealthDepartment
#RecruitmentScam
#TamilNaduGovernment
#DisciplinaryAction
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications