டென்சிங் நோர்கே: எவரெஸ்ட் நாயகனின் மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்களை மீட்கும் புதிய திரைப்படம்

எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்த டென்சிங் நோர்கேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ள 'டென்சிங்' திரைப்படம் அக்டோபர் 16 அன்று வெளியாகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தவர்களில் ஒருவரான டென்சிங் நோர்கேவின் வாழ்க்கையை, அவரது கோணத்தில் சொல்லும் முயற்சியாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பில் 'டென்சிங்' திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபல ஆஸ்திரேலிய திரைப்படத் தயாரிப்பாளர் ஜெனிபர் பீடம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், டென்சிங் நோர்கேவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர் எதிர்கொண்ட தடைகள் மற்றும் அவரது மன உறுதி ஆகியவற்றை ஆழமாகப் பதிவு செய்கிறது. கடந்த காலங்களில் எவரெஸ்ட் சிகரத்தின் வெற்றி குறித்த கதைகளில் ஒரு துணை கதாபாத்திரமாகவே டென்சிங் சித்தரிக்கப்பட்ட சூழலில், இந்தத் திரைப்படம் உண்மையான வரலாற்றை முன்வைக்கும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்தத் திரைப்படத்தில் டென்சிங் நோர்கேவின் இளமை மற்றும் முதிர்ச்சிக் காலங்களை முறையே டென்சின் தல்ஹா மற்றும் கெண்டன் புன்ட்சோக் ஆகியோர் ஏற்று நடித்துள்ளனர். டென்சிங்கின் மனைவியாக தின்லி லாமோ நடித்துள்ளார். மேலும், எட்மண்ட் ஹில்லாரியாக டாம் ஹிடில்ஸ்டனும், ஜான் ஹன்ட் கதாபாத்திரத்தில் வில்லெம் டாஃபோவும் நடித்துள்ளனர். ஜெனிபர் பீடம் தனது நீண்ட கால ஆய்வின் அடிப்படையில், டென்சிங்கின் வாழ்க்கையை உலகிற்கு உணர்த்தும் நோக்கில் இக்கதையை உருவாக்கியுள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 16 அன்று ஆப்பிள் டிவி தளத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
படப்பிடிப்பு தளங்களைத் தேர்வு செய்வதில் பெரும் மெனக்கெடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இமயமலையின் கலாச்சாரப் பின்னணியைப் பிரதிபலிக்கும் காட்சிகள் நேபாளத்திலும், சிகரத்தின் உச்சப் பகுதிகள் மற்றும் மலையேற்றத் தொழில்நுட்பக் காட்சிகள் நியூசிலாந்தின் தெற்கு ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலும் படமாக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் அந்தச் சூழலோடு ஒன்றிணைந்து செயல்படும் வகையில், உண்மையான மலையேற்ற அனுபவத்தைப் பெற சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, டென்சிங் நோர்கே வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையை உணர, நடிகர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் காட்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்தத் திரைப்படம் டென்சிங் நோர்கேவின் மலையேற்ற சாதனைக்கு அப்பால், பல்வேறு கலாச்சாரங்களைக் கடந்த அவரது மனிதநேயம் மற்றும் ஆர்வம் மிக்க ஆளுமையை வெளிப்படுத்துகிறது. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, உலகின் உயர்ந்த சிகரத்தை எட்டிய அவரது பயணம், பலருக்கும் ஒரு உந்துதலாக அமையும். வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் இந்தத் திரைப்படம், எவரெஸ்ட் சிகரம் குறித்த பார்வையை மாற்றியமைக்கும் ஒரு ஆவணமாகவும், கலைப்படைப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









