உளுந்தூர்பேட்டை: விசிக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பு - பாதியில் வெளியேறிய தொல். திருமாவளவன்

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டில் கூட்ட நெரிசல் காரணமாக திருமாவளவன் தனது உரையை பாதியில் முடித்துக்கொண்டு பாதியில் வெளியேறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. விசிக தலைவர் தொல். திருமாவளவனின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரம்மாண்ட மாநாட்டில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். திட்டமிட்டதை விட அதிகப்படியான மக்கள் வருகை தந்ததால், நிகழ்விடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
மாநாட்டுக்கு வருகை தந்த தொல். திருமாவளவன் சுமார் 200 மீட்டர் தூரம் கொண்ட ராம்ப் பாதையில் தீப்பந்தத்துடன் நடந்து வந்தபோது, அவரைப் பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர். அந்தத் தருணத்திலேயே கூட்டம் கட்டுப்பாட்டை மீறத் தொடங்கியது. திருமாவளவன் மேடைக்குத் திரும்பியபோது, அவரைச் சூழ்ந்தபடி கூட்டம் முன்னேறியது. சில தொண்டர்கள் டிஜிட்டல் திரைகள் மற்றும் கட்-அவுட்களின் மீது ஏறியதால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். கூட்டத்தை முறையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்தச் சலசலப்புக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
சுமார் ஒரு மணி நேரம் உரையாற்ற திட்டமிட்டிருந்த நிலையில், கூட்டத்தின் அத்துமீறல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக திருமாவளவன் தனது உரையைச் சில நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டார். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அவர் உடனடியாக மேடையிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விசிக நிர்வாகி வன்னி அரசு விளக்கமளித்தார். தங்களின் தலைவரின் உரையை கேட்க முடியாமல் போனது தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும், தலைவரின் பாதுகாப்பே முக்கியம் என்பதில் கட்சியினர் உறுதியாக இருந்தனர்.
மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த விசிக நிர்வாகிகள், சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டதே இத்தகைய நெருக்கடிக்கு காரணம் என்று தெரிவித்தனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையினர் பெருமளவில் வருகை தந்தது கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டனர். இத்தகைய மாபெரும் கூட்டத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சவால்கள் எதிர்கால நிகழ்வுகளுக்குப் பாடமாக அமையும் என்றும், தொண்டர்களின் பாதுகாப்பான பங்கேற்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









