திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததால் பதற்றம் - காவல்துறையினருடன் மோதல்

திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடைபெறாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், கோயில் வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும், நிலுவையில் உள்ள மறுசீராய்வு மனுவை காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க மாட்டோம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். ஆனால், செவ்வாய்க்கிழமை மாலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாமல் போனது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
வழக்கம்போல உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவல்துறை முயற்சி செய்தது. போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறைக்கும், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட 163 பிஎன்எஸ்எஸ் தடை உத்தரவு கோயிலுக்கு வரும் பக்தர்களையோ அல்லது கிரிவலம் செல்பவர்களையோ பாதிக்காது என அரசு விளக்கம் அளித்திருந்த நிலையிலும், தீபம் ஏற்றப்படாதது விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிகழ்வினால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கோயிலுக்கு வருகை தந்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில், அரசு நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே இந்த மோதலுக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர். கோயில் நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் தொடர்ந்து மௌனம் காக்கப்பட்டு வருவது பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.









