தூத்துக்குடியில் 4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம்: 6 மாதங்களில் இறுதி அறிக்கை

தூத்துக்குடியில் அமையவுள்ள பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளத்திற்கான விரிவான திட்ட அறிக்கை அடுத்த 6 மாதங்களில் தயாராகும் என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அமையவுள்ள புதிய கப்பல் கட்டும் தளத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் கூட்டு முயற்சி கட்டமைப்பை அடுத்த ஆறு மாதங்களுக்குள் இறுதி செய்ய இந்தியா மற்றும் தென்கொரியாவின் எச்டி ஹூண்டாய் (HD Hyundai) நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளன. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், தென்கொரியாவின் சியோல் நகரில் எச்டி ஹூண்டாய் நிறுவனத்தின் தலைவர் சுங் கி-சன்னை நேரில் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகு, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்த கிரீன்பீல்டு கப்பல் கட்டும் தளம், தென்கொரியாவின் மேம்பட்ட கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தையும், இந்தியாவின் உள்நாட்டுத் தேவை மற்றும் உற்பத்தித் திறனையும் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பு அதிகாரிகளைக் கொண்ட கூட்டுப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் முதன்மை மூலோபாய முதலீட்டாளராகப் பங்கேற்பதில் எச்டி ஹூண்டாய் நிறுவனம் உறுதியாக இருப்பதாக அமைச்சர் சர்பானந்த சோனோவால் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கப்பல் கட்டும் தளம் இந்தியாவில் உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட கப்பல் கட்டுமான சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சர்வதேச கடல்சார் துறையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்தவும், நாட்டின் ஏற்றுமதி மற்றும் தொழில்சார் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் கட்டுமானத் துறை மட்டுமின்றி, துறைமுக உபகரணங்கள் மற்றும் கடல்சார் உற்பத்தி சார்ந்த துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து, தென்கொரியாவின் வர்த்தக, தொழில் மற்றும் வளத்துறை அமைச்சர் பார்க் ஜங்-சுங்குடனும் சர்பானந்த சோனோவால் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதம் எச்டி கேஎஸ்ஓஇ (HD KSOE) நிறுவனத்தின் உயர்மட்டக் குழு, சுன்ஜூன் ஹாங் தலைமையில் தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்து பத்து நாட்கள் தங்கி கள ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்போது அமைச்சர் சர்பானந்த சோனோவாலின் இந்த அரசுமுறைப் பயணம், இந்தத் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு விரைவாகக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது. தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் அமையவுள்ள இந்தத் தளம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை உலக அரங்கில் அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.









