தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்ட பாதிப்புக்கு உள்ளான இளைஞர் மீது குடிபோதை கும்பல் கொடூர தாக்குதல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட இளைஞரை குடிபோதையில் இருந்த கும்பல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜி. பிரின்ஸ்டன் (29). இவர் தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து, தனது ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது செயற்கை கால் பொருத்தப்பட்ட நிலையில் அவர் இயல்பு வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பிரின்ஸ்டன் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் தேவாலயத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, மில்லர்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் பிரின்ஸ்டனின் வாகனம் மீது மோதியது. குடிபோதையில் இருந்த அந்த நபர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் என மொத்தம் மூன்று பேர் பிரின்ஸ்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பிரின்ஸ்டன் தட்டிக்கேட்டபோது, அந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கியது. இதில், ஒரு நபர் செங்கல்லைக் கொண்டு பிரின்ஸ்டனின் தலையில் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
தாக்குதலில் காயமடைந்த பிரின்ஸ்டனை அவரது பெற்றோர் மீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் பின்னர் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட இளைஞர் ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கடும் உடல் உபாதைகளுக்கு உள்ளானவர் என்பதால், இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற மற்றொரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் பகுதியில் அரங்கேறியுள்ளது. பெரும்படை சாஸ்தா கோயில் தெருவில் குடிபோதையில் அலப்பறை செய்த நான்கு பேர் கொண்ட கும்பல், பொதுமக்களைத் தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக சாயர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஏரல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராமன் (23) மற்றும் பொன்செல்வம் (21) ஆகிய இருவரை கைது செய்து திங்கள்கிழமை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மற்றும் வன்முறையில் ஈடுபடும் இத்தகைய கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









