வேலூரில் கட்டுமானப் பணி நடந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி

வேலூர் மாவட்டம் திருவாலம் அருகே கட்டப்பட்டு வந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் திருவாலம் அருகே உள்ள மஞ்சகிருஷ்ணாபுரத்தில் சி.எஸ்.ஐ. சியோன் ஹில் தேவாலயம் கட்டப்பட்டு வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக அதன் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வியாழக்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை சரிந்து விழுந்ததில், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜான் (39), மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இம்மானுவேல் (45) மற்றும் சாமுவேல் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இம்மானுவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், சாமுவேல் இடிபாடுகளுக்கு அடியிலிருந்தும் சடலமாக மீட்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த மற்ற 14 தொழிலாளர்களில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 10 தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
விபத்து நடந்த பகுதி ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் இருப்பதால், மீட்புப் பணிகளுக்கு ஆந்திர போலீசாரும் உதவினர். திருவாலம் காவல்துறையினர் மற்றும் காட்பாடி தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர், மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் யாரும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த இரவு வரை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. கட்டுமானத் தளத்தில் உணவு இடைவேளைக்காக தொழிலாளர்கள் அருகில் இருந்த பகுதிக்குச் சென்றிருந்ததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சிபின் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். சுதாகர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாலம் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணங்கள் மற்றும் கட்டுமானத் தரத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.









