சிவகாசியில் பிரம்மாண்ட பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையம்: டிட்கோ முன்னெடுப்பு

இந்தியாவின் பட்டாசு தலைநகரான சிவகாசியில் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை.
இந்தியாவின் பட்டாசு தயாரிப்புத் தலைநகராகத் திகழும் சிவகாசியில், பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த வெடிபொருள் தொழில்நுட்பங்களுக்கான பிரத்யேக பொது வசதி மையத்தை (Sivakasi Pyrotechnic Common Facility Centre - SPCFC) அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்கும், நிதி ஆய்வு மேற்கொள்வதற்கும் தகுதியான ஆலோசனை நிறுவனங்களைத் தேர்வு செய்யும் பணிகளை டிட்கோ தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமையத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பொது வசதி மையமானது சோதனை, தரச்சான்றிதழ், ஆராய்ச்சி, தானியங்கி மயமாக்கல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப வணிகமயமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மையமாகச் செயல்படும். சிவகாசி பகுதியில் சுமார் 1,070 உரிமம் பெற்ற பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை இந்திய பட்டாசு உற்பத்தியில் 90 சதவீத பங்களிப்பை வழங்குவதோடு, சுமார் 7,000 கோடி ரூபாய் வருவாயையும் ஈட்டித் தருகின்றன. நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சம் குடும்பங்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும் இத்தொழில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
தற்போது இத்தொழில் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்கள், பசுமை பட்டாசு தயாரிப்புக்கான விதிமுறைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் மையங்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்படுகிறது. சீனாவில் உள்ள லியுயாங் நகரைப் போல, சிவகாசியையும் உலகத் தரம் வாய்ந்த வெடிபொருள் தொழில்நுட்ப மையமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியை தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் உற்பத்தியாளர்கள் சங்கம் (TANFAMA) வரவேற்றுள்ளது. இதற்கான ஆலோசனை நிறுவனங்களைத் தேர்வு செய்ய இரண்டு கட்ட செயல்முறை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் சிவகாசியின் பட்டாசு தொழில் அடுத்தகட்டத்திற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி பட்டாசு இறக்குமதியாளர் நிறுவனம், சிவகாசி உற்பத்தியாளர்களிடம் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை வழங்க முன்வந்துள்ள சூழலில், இத்தகைய தொழில்நுட்ப மையம் அமையும் போது, சர்வதேச சந்தையில் சிவகாசியின் மதிப்பு மேலும் அதிகரிக்கும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நவம்பர் 13-ஆம் தேதியை இறுதித் தேதியாகத் டிட்கோ நிர்ணயித்துள்ளது.









