திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேர்ந்த மருத்துவ குளறுபடி: சிறுவனுக்கு தவறான காலில் அறுவை சிகிச்சை

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு தவறான காலில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவருக்கு, மருத்துவர்கள் தவறான காலில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த சிறுவனின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், மருத்துவர்கள் தவறுதலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த நிகழ்வு நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ரஹீம் என்ற 15 வயது சிறுவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனது வலது காலில் உள்ள தசைநார் பாதிப்புக்கு (PCL tear) அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதற்காக அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனுக்கு, எலும்பியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்படாத இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் நிலையைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், தவறான காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தங்களின் தவறை உணர்ந்த மருத்துவர்கள், உடனடியாக வலது காலிலும் அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது, பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த அலட்சியமான செயல் குறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் செல்வராஜன் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் (DMER) சார்பில் மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தேவையான உரிய சிகிச்சைகளை அளித்து, அவனது உடல்நிலையை பழைய நிலைக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். சிறுவனின் மருத்துவக் கோப்புகள் அனைத்தும் ஆய்வுக்காக DMER-க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.









