திருப்பத்தூர் இரட்டை கொலை வழக்கு: தவெக உறுப்பினர் கைது - பின்னணி என்ன?

திருப்பத்தூர் அருகே இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தவெக உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பட்டி அருகே தனியார் நிலத்தில் மாலினி (31) மற்றும் ரஞ்சித் குமார் (30) ஆகிய இருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வக்கரே மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முரளி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வழக்கை புலனாய்வு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தீவிர விசாரணையின் முடிவில், திருவண்ணாமலையைச் சேர்ந்த சஞ்சீவ் காந்தி (35) என்பவர் இந்த கொலையைச் செய்தது உறுதி செய்யப்பட்டது. அவர் திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த நிலையில், உடல்கள் கண்டெடுக்கப்பட்ட ஏழு மணி நேரத்திற்குள்ளாகவே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்களின்படி, திருப்பத்தூரைச் சேர்ந்த மாலினிக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சஞ்சீவ் காந்திக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இதற்கிடையில், மாலினி தனது மூத்த சகோதரியின் உறவினரான ரஞ்சித் குமாருடனும் பழகி வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக சஞ்சீவ் காந்தியின் அழைப்புகளை மாலினி தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் காந்தி, வெள்ளிக்கிழமை அன்று மாலினியும் ரஞ்சித்தும் காரில் சென்றதைப் பின்தொடர்ந்துள்ளார்.
தோரணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு சென்ற சஞ்சீவ் காந்தி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ரஞ்சித் குமார் குறுக்கிட்டபோது, அவரை அரிவாளால் தலையிலும் கைகளிலும் கழுத்திலும் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து மாலினியையும் தலையிலும் கழுத்திலும் வெட்டி கொன்ற சஞ்சீவ் காந்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் உடல்களைக் கண்டு அளித்த தகவலின் பேரில் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. கைது செய்யப்பட்ட சஞ்சீவ் காந்தியிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









