திருப்பூர்: தந்தையின் நினைவாக ரயில் தண்டவாளத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி

திருப்பூரில் தந்தையின் மறைவால் மனமுடைந்த 12-ஆம் வகுப்பு மாணவி அதே ரயில் தண்டவாளத்தில் உயிர் மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் செம்மண்டம்பாளையம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தும் வகையில், 16 வயதுடைய பிளஸ் 2 மாணவி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த மாணவி சாதனா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்தார். இவரது தாயார் ஜானகி அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தினமும் பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்வது சாதனாவின் வழக்கமாகும். இந்தத் துயரச் சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாணவியின் தந்தை கார்த்திக் என்பவர், சாதனாவை பள்ளிக்கு விட்டுவிட்டுத் திரும்பி வரும்போது அதே ரயில் தண்டவாளத்தில் ரயில் மோதி உயிரிழந்தார். தந்தையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த சாதனா, அந்த எதிர்பாராத மரணத்தால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தந்தையின் இழப்பு அந்த சிறுமியின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. தந்தையின் நினைவுகள் அவரை வாட்டி வந்த சூழலில், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த புதன்கிழமை அன்று, பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சாதனா, தனது தந்தை உயிரிழந்த அதே இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ரயில் தண்டவாளத்தின் அருகே நின்ற மாணவி, அதே இடத்தில் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் ரயில்வே காவல் துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை உயிரிழந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே, தனது ஒரே மகளையும் இழந்து தவிக்கும் தாயாரின் நிலை அனைவரையும் உருக்குலைத்துள்ளது. குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்கள் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. மன அழுத்தத்திலோ அல்லது தற்கொலை எண்ணங்களிலோ இருப்பவர்கள் தயக்கமின்றி உதவிகளை நாடலாம். மனநல ஆலோசனை மற்றும் தற்கொலை தடுப்பு உதவிக்கு 104 என்ற சுகாதாரத் துறையின் கட்டணமில்லா உதவி எண்ணையோ அல்லது ஸ்நேகா தற்கொலை தடுப்பு அமைப்பின் 044-24640050 என்ற எண்ணையோ தொடர்புகொண்டு வழிகாட்டல் பெறலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.









