திருவள்ளூர் அருகே பயங்கரம்: கல்லூரி பேருந்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர் கைது

திருவள்ளூர் அருகே கல்லூரி பேருந்தை எரித்து கொலையு செய்ய முயன்ற பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கல்லூரி பேருந்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் என்ற 21 வயதுடைய பொறியியல் மாணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர் தனது முன்னாள் தோழியை பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது அந்த பேருந்தில் பாதிக்கப்பட்ட பெண் மாணவி உட்பட மொத்தம் 11 மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுப் பிரிவு (Artificial Intelligence Engineering) படித்து வருகிறார். இவருக்கும் அதே வளாகத்தில் பயிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக பழக்கம் இருந்துள்ளது. சமீபத்தில் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டனர். அந்த மாணவி ஸ்ரீகாந்துடனான தொடர்பைத் துண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த அவர் இந்த தாக்குதலைத் திட்டமிட்டுள்ளார்.
புதன்கிழமை மாலை கல்லூரி பேருந்து அரியாப்பாக்கம் அருகே சென்றபோது, ஸ்ரீகாந்த் தனது இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்தின் குறுக்கே நிறுத்தி வழிமறித்துள்ளார். தான் முன்னரே தண்ணீர் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை, பேருந்தின் உள்ளே இருந்த அந்த மாணவியின் மீது ஊற்றியதுடன், பேருந்தையும் தீ வைத்து எரிக்க முயன்றுள்ளார். பேருந்தில் மாணவர்கள் இருந்த நிலையில், ஸ்ரீகாந்தின் செயலைப் பார்த்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தலையிட்டு அவரை மடக்கிப் பிடித்தனர். சரியான நேரத்தில் தலையிட்டதால், மாணவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் துறையினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்தைக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் அப்பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









