திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: பக்தர்களுக்காக கூடுதல் சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம் - முழு விவரம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு மெமு (MEMU) ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவைக் கொண்டாடும் வகையில், பக்தர்களின் வருகையை எளிதாக்கும் நோக்கில் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் முன்பதிவு இல்லாத மெமு (MEMU) ரயில் சேவைகளை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு சேவைகள் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் தடையின்றி திருவண்ணாமலையை வந்தடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினமும் சிறப்பு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இது காலை 6.20 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு, காலை 11.40 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையிலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்றடையும். இந்த 12 பெட்டிகளைக் கொண்ட ரயில், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா சாலை, காட்பாடி மற்றும் வேலூர் கன்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் மற்றொரு சிறப்பு ரயில், காலை 9.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். திரும்பும் பயணத்திற்காக, அதே நாளில் இரவு 10.25 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இது தவிர, காட்பாடி மற்றும் திருவண்ணாமலை இடையே தலா இரண்டு ரயில்கள் என மொத்தம் நான்கு 12 பெட்டிகள் கொண்ட மெமு சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் போளூர், ஆரணி சாலை மற்றும் வேலூர் கன்டோன்மென்ட் ஆகிய இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கும்.
கூடுதலாக, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையேயும், அதேபோல் வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் விழுப்புரம் இடையேயும் சிறப்பு ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த ரயில்கள் வழியிலுள்ள அனைத்து முக்கிய நிறுத்தங்களிலும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே இந்த கூடுதல் ரயில் சேவைகளை அறிவித்திருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.









