திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு எதிரான பாலியல் புகார்: நாகப்பட்டினத்திற்கு இடமாற்றம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு எதிரான பாலியல் புகாரை அடுத்து, அவர் நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயின்று வரும் நர்சிங் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பொது மருத்துவத் துறைத் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் என்.டி. சோஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 3-ஆம் தேதி இந்திய நீதி சம்ஹிதையின் பிரிவு 75(1) மற்றும் 79 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தமிழ்நாடு பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4-வது பிரிவின் கீழும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 20 வயது மாணவி தனது புகாரில், சம்பந்தப்பட்ட பேராசிரியர் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதோடு, தவறான முறையில் தொட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நீண்ட நாட்களாகவே இந்தப் பேராசிரியர் மற்ற மாணவிகளிடமும் இதுபோன்று அத்துமீறி நடந்து கொள்வதாகவும், ஆனால் அவர்கள் அச்சம் காரணமாக புகார் அளிக்க முன்வரவில்லை என்றும் மாணவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மாணவியின் முக்கியக் குற்றச்சாட்டாகும். குறிப்பாக, கல்லூரியின் உள் புகாருக் குழுவிடம் (ICC) புகார் அளித்தபோது, சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர் ஒருவர் அந்தப் பேராசிரியரின் செயலை நியாயப்படுத்தும் வகையில் பேசியதாக மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.
கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தபோதும், விசாரணை நடைபெறுவதாக மட்டுமே பதில் கிடைத்ததாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார். மேலும், தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகக் கூறி பேராசிரியர் தன்னை மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, அந்தப் பேராசிரியரை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பணியிடமாற்றம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நெஞ்சு வலிப்பதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேராசிரியர், மறுநாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரான டாக்டர் ஏ. அரவிந்த் இது குறித்து கூறுகையில், தற்போது வரை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் பேராசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும், இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். பேராசிரியரின் மீதான முந்தைய புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கல்லூரி முதல்வர் எட்வினா வசந்தா, பேராசிரியரின் பணியிடமாற்றத்தை உறுதிப்படுத்திய போதிலும், விரிவான கருத்துகளைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









